உள்ளூர் செய்திகள்

கேத்தனூர் வங்கியில் அடகு நகை மோசடி- இழப்பீடு வழங்காததை கண்டித்து 21-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2022-06-19 08:47 GMT   |   Update On 2022-06-19 08:47 GMT
  • உரிய இழப்பீடு வழங்க இதுவரை 3 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
  • இனிமேல் காலம் தாழ்த்தக் கூடாது .

பல்லடம்:

பல்லடம் அருகே கேத்தனூரில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது. இந்த கிளையில் கேத்தனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கணக்குகள் தொடங்கி வரவு செலவு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் சிலர் குடும்ப சூழல் காரணமாக கேத்தனூர் வங்கி கிளையை அணுகி நகை கடன் பெற முயலும் பொழுது அங்கு நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்த சேகர் (வயது 57) வாடிக்கையாளர்கள் கொடுக்கும் நகைகளில் குறிப்பிட்ட அளவை வெட்டி எடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வங்கியின் நகை மதிப்பீட்டாளர் சேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் நகை மோசடியில் பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க இதுவரை 3 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது .கடைசியாக நடந்த பேச்சுவார்த்தையில் ஜூன் 20-ந் தேதிக்குள் இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கி நிர்வாகம் கூறியதாக கூறப்பட்ட நிலையில் இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் நகை மோசடியால் பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு உரிய இழப்பீடு உடனடியாக வழங்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வரும் ஜூன்-21ல் கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கி முன்பு பாதிக்கப்பட்ட விவசாயிகள், வாடிக்கையாளர்களுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வக்கீல் ஈசன் கூறியதாவது:- கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கயில் அரங்கேறிய நூதன நகை திருட்டு சம்பந்தமாக கடந்த மாதம் மே மாதம் 20 ந்தேதியன்று கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கி அலுவலகத்தில் பல்லடம் தாசில்தார் முன்னிலையில் வங்கி அதிகாரிகள் மற்றும் விவசாயிகளிடையே 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதுவரை அடகு வைத்த நகைகளில் எடை குறைவாக உள்ளதாக புகார் அளித்துள்ள 557 வாடிக்கையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ள நகைகள் மட்டுமின்றி நகைகளை பணம் செலுத்தி திருப்பி எடுத்த பின் நூதன திருட்டு நடைபெற்றதாக புகார் அளித்து இருக்கும் 84 வாடிக்கையாளர்களுக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் . கடந்த மூன்று மாதங்களாக இந்த பிரச்சினை குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்ததால் நகைகளை மீட்க முடியாத வாடிக்கையாளர்களுக்கு போடப்பட்டுள்ள வட்டி பணத்தை தள்ளுபடி செய்யவேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும் வங்கி தரப்பிற்கு ஒரு மாத காலம் விவசாயிகள் தரப்பில் கால அவகாசம் வழங்கப்பட்டது. நாளை 20-ந்தேதிக்குள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நகைக்கான சரியான இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும்.இனி அடகு வைத்த நகைகளை திருப்பி எடுக்க வரும் வாடிக்கையாளர்களுக்கு நகையின் தரத்தை உறுதி படுத்தி கொடுக்க வேண்டும் .இனிமேல் காலம் தாழ்த்தக் கூடாது . ஒரு மாதத்திற்குள் இழப்பீடு வழங்காத பட்சத்தில் நாளை 20 ந்தேதி முதல் வங்கி முன்பு பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களும் விவசாயிகளும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் விவசாயிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் அளித்த ஒரு மாத கால அவகாசம் முடியும் நிலையில் வங்கித் தரப்பில் முறையான இழப்பீடு வழங்கப்படாததை கண்டித்து நாளை மறுநாள் 21-ந்தேதி கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கி முன்பு பாதிக்கப்பட்ட விவசாயிகள், வாடிக்கையாளர்களுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News