உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

உதவி இயக்குனர் பணியிடம் நிரப்பப்படாததால் திருப்பூர் பேரூராட்சிகளில் அடிப்படை பணிகளை நிைறவேற்றுவதில் சிக்கல்

Published On 2022-07-20 11:02 IST   |   Update On 2022-07-20 11:02:00 IST
  • அவசியமான அடிப்படை வசதிகளை உடனுக்குடன் செய்து முடிக்க வேண்டியுள்ளது.
  • நிர்வாக தடுமாற்றத்தை சரி செய்ய வேண்டும்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் 15, ஈரோடு மாவட்டத்தில், 42 என 57 பேரூராட்சிகள் உள்ளன. இரு மாவட்ட பேரூராட்சிகளுக்கும் சேர்த்து ஈரோடு மாவட்டத்தில் உதவி இயக்குனர் அலுவலகம் செயல்படுகிறது.எல்லைக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் அவசியமான அடிப்படை வசதிகளை உடனுக்குடன் செய்து முடிக்க வேண்டியுள்ளது.

இப்பணிகளை பேரூராட்சி பொதுநிதியில் இருந்தே மேற்கொள்ள வேண்டிய நிலையில், வெறும் 10 ஆயிரம் ரூபாய் அளவுக்கு மட்டுமே நிதியை செலவழிக்கும் அதிகாரம், பேரூராட்சி செயல் அலுவலருக்கு உள்ளது. அதற்கு மேல் செலவிடப்படும் தொகைக்கு, உதவி இயக்குனரிடம் ஒப்புதல் பெற்று அவரிடம் தான் பெற வேண்டும். ஆனால் ஈரோடு மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குனர் பணியிடம், 3 மாதங்களாக காலியாகவே உள்ளது. இதனால் பேரூராட்சிகளில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

பேரூராட்சி நிர்வாகத்தினர் சிலர் கூறியதாவது:-

உதிரி பாகங்களின் விலையேற்றம், ஜி.எஸ்.டி., பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற காரணங்களால், கால்வாய் அடைப்பை சரி செய்ய பொக்லைன் பயன்படுத்துவது, குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய, மின் பராமரிப்பு பணி மேற்கொள்ள உதிரிபாகம் வாங்குவதற்கு கூட, சர்வ சாதாணமாக 10 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.அதிகாரிகள் மீதுள்ள நம்பிக்கையால், சிலர் கடன் அடிப்படையில் உதிரி பாகங்கள் தருகின்றனர்.

ஆனால் நிர்வாக அனுமதி கிடைக்காததால், வழங்க வேண்டிய தொகையை வழங்க முடியாமல், தர்மசங்கட நிலைக்கு ஆளாகியுள்ளோம்.அந்த கடன் சுமை எங்கள் தலையில் உள்ளது. நிர்வாக ஒப்புதல் கிடைப்பதில் உள்ள தாமதத்தை காரணங்காட்டி, அடிப்படை வசதிகளை செய்யாமல் இருந்தால், மக்களின் அதிருப்தியை சம்பாதிக்க நேரிடுகிறது. எனவே உதவி இயக்குனர் பணியிடம் உடனடியாக நிரப்பி, நிர்வாக தடுமாற்றத்தை சரி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News