உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

பல்லடம் அருகே ரோட்டில் சென்று கொண்டிருந்தவர் மீது அறுந்து விழுந்த மின் கம்பி

Published On 2022-10-08 07:32 GMT   |   Update On 2022-10-08 07:32 GMT
  • அதிர்ஷ்டவசமாக மின்தடை ஏற்பட்டதால் உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை.
  • சம்பவத்திற்கு உரிய இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள நாரணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன்(28) கட்டிடத் தொழிலாளி. நேற்று இவர் மோட்டார் சைக்கிளில் பல்லடத்தில் இருந்து திருப்பூருக்கு சென்று கொண்டிருந்தார். பல்லடத்தை அடுத்த அருள்புரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, ரோட்டோர மின்கம்பத்தில் இருந்த மின்கம்பி திடீரென அறுந்து மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்த பாலமுருகன் மீது விழுந்தது. இதனால் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் ரோட்டில் விழுந்தார். அதிர்ஷ்டவசமாக இவருக்கு பின்னால் வந்த வாகனங்கள் இவர் மீது மோதாமல் சென்றன.

மின் கம்பி கழுத்தின் பின்பகுதி மற்றும் முன்பகுதியில் சிராய்த்து பலத்த காயம் ஏற்பட்ட பாலமுருகனை அக்கம்- பக்கம் உள்ளவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்ற நிலையில்,அவர் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தின் போது அதிர்ஷ்டவசமாக மின்தடை ஏற்பட்டதால் உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை.இது குறித்து பாலமுருகனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில் துருப்பிடித்து பழுதடைந்த நிலையில் உள்ள மின் கம்பிகளை, மின்வாரிய அதிகாரிகள் போதிய பராமரிப்பு செய்யாமலும், உரிய காலத்தில் அவைகளை மாற்றாமல் இருந்ததுமே இந்த விபத்துக்கு காரணம் என்றும் இனியும் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க போர்க்கால அடிப்படையில் நீண்ட நாட்களாக பழுதடைந்த நிலையில் உள்ள மின் கம்பிகளை மாற்ற வேண்டும் என்றும் தற்போது நடந்துள்ள சம்பவத்திற்கு உரிய இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News