கோப்புபடம்
ஊத்துக்குளி அருகே பள்ளத்திற்குள் பாய்ந்த மோட்டார் சைக்கிள் - வாலிபர் பலி
- பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விழுந்தது.
- ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்துக்குளி:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சீனாபுரத்தை சேர்ந்த பழனிசாமி மகன் பூபதி (வயது 26), துரைசாமி மகன் தினேஷ் (வயது 28), மாச நாயக்கர் மகன் சோமசுந்தரம் . இவர்கள் 3 பேரும் சம்பவத்தன்று ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர்.பூபதி மோட்டார் சைக்கிளை ஓட்டினார். அவருக்கு பின்னால் தினேஷ் மற்றும் சோமசுந்தரம் அமர்ந்து பயணம் செய்தனர். பூபதி வண்டியை வேகமாக ஓட்டியதாக தெரிகிறது.
ஊத்துக்குளி அருகே உள்ள மல்லாங்காட்டு புதூர் பிரிவு, சின்னையம் கவுண்டம்பாளையம் அருகே வந்தபோது அங்கு ரோட்டில் பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கட்டுப்பாட்டை இழந்து விழுந்தது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பூபதி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மற்ற 2 பேருக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தினேஷ், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், சோமசுந்தரம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர் . அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.