உள்ளூர் செய்திகள்

பாக்கு மரங்கள் செழித்து வளர்ந்துள்ளதை படத்தில் காணலாம்.

உடுமலை வட்டாரப்பகுதியில் பாக்கு மரம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

Published On 2022-07-26 08:18 GMT   |   Update On 2022-07-26 08:18 GMT
  • மரங்கள் செழித்து வளர்ந்து, பாக்கு அறுவடையையும் மேற்கொண்டு வருகின்றனர்.
  • அறுவடை எண்ணிக்கை பயிரிடும் இடம் மற்றும் பருவத்திற்கு ஏற்ப மாறுபடும்.

உடுமலை :

உடுமலை சுற்றுப்பகுதியில், கிணற்று ப்பாசனத்துக்கு, தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. வறட்சி மற்றும் நோய்த்தாக்குதல் உட்பட காரணங்களால் தென்னை மரங்கள் பாதிப்பு தொடர்கதையாக உள்ளது.இதனால் மாற்று பயிர் சாகுபடிக்கு விவசாயிகள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். அதன்படி விளைநிலங்களில் தனிப்பயிராக பாக்கு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கின்றனர். தண்ணீர் வசதியுள்ள பகுதிகளில் மரங்கள் செழித்து வளர்ந்து, பாக்கு அறுவடையையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது:-

பாக்கு மரங்களுக்கு நவம்பர் ,பிப்ரவரி மாதங்களில் வாரம் ஒரு முறையும், ஜூன், ஜூலை மாதங்களில் நான்கு நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும். வாய்க்கால் முறையில் ஒரு மரத்துக்கு 175 லிட்டர் தண்ணீரும், சொட்டு நீர்ப்பாசன முறையில் 16 - 20 லிட்டரும் தேவைப்படும். மரம் ஒன்றுக்கு தொழு உரம் 10 முதல் 15 கிலோ, 100 கிலோ தழைச்சத்து, 40 கிலோ மணிச்சத்து, 150 கிலோ சாம்பல் சத்து இட வேண்டும். 5 வயதுக்கு குறைவான மரங்களுக்கு மேலே குறிப்பிட்டுள்ள உர அளவில் பாதி இட வேண்டும். நடவு செய்த 5 ஆண்டுகளில் பாக்கு மரம் காய்ப்புக்கு வரும். கால் பங்கு அளவு பழுத்த பழங்களை அறுவடை செய்யவேண்டும். ஆண்டுக்கு மூன்று முதல் ஐந்து முறை அறுவடை செய்யலாம். அறுவடை எண்ணிக்கை பயிரிடும் இடம் மற்றும் பருவத்திற்கு ஏற்ப மாறுபடும். எக்டருக்கு 1,250 கிலோ வரை மகசூல் கிடைக்கும் என்றனர்.

Tags:    

Similar News