உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

இயற்கை காய்கறி விற்பனையில் அசத்தும் விவசாயிகள்

Published On 2022-08-30 05:40 GMT   |   Update On 2022-08-30 05:40 GMT
  • உழவர் சந்தை மூலம் வழக்கமாக காய்கறி விற்பனை செய்கிறோம்.
  • இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளுக்கு உண்டான மதிப்பு கிடைக்காமல் போகிறது.

பல்லடம் :

இன்றைய சூழலில் பூச்சி, நோய் தாக்குதல், இயற்கை சீற்றம் உள்ளிட்ட பாதிப்புகளை கடந்து எப்பாடுபட்டாவது மகசூல் கொண்டுவர வேண்டும் என்ற நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இருப்பினும் சில விவசாயிகள் இயற்கை முறையில் காய்கறிகளை விளைவிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் சாகுபடி செய்கின்றனர். இதற்காக தடைக்கற்களை உடைத்தெறிந்து தங்கள் இலக்கை அடைகின்றனர். அவ்வாறு பல்லடத்தை சேர்ந்த விவசாயிகள் பலர் ஒன்றிணைந்து இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறி விற்பனையை துவக்கியுள்ளனர். இதற்கு பொதுமக்களின் ஆதரவும் பெருகி வருகிறது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், உழவர் சந்தை மூலம் வழக்கமாக காய்கறி விற்பனை செய்கிறோம். அதிகாலை நேரம் என்பதாலும் இதர காய்கறியுடன் விற்பனை செய்வதாலும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளுக்கு உண்டான மதிப்பு கிடைக்காமல் போகிறது. எனவே இயற்கை காய்கறிகளை விரும்பும் மக்களுக்கு அவை முறையாக சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள் சிலர் ஒன்றிணைந்து பிரத்யேகமான இயற்கை காய்கறி விற்பனை அங்காடி திறக்கவும் திட்டமிட்டு துவக்கியுள்ளோம். பனப்பாளையத்தில், சிவன் காய்கறி அங்காடி என்ற பெயரில் ஞாயிறு மற்றும் புதன்கிழமையன்று மாலை 3மணி முதல் 6மணி வரை இயங்கி வருகிறது. பொது மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இதை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்றனர்.

இயற்கை காய்கறி விற்பனை செய்ய, விவசாயிகள் அங்காடி தேடி வருவதாக தகவல் கிடைத்ததும், தங்களுக்கு சொந்தமான கட்டடத்தின் ஒரு பகுதியை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என தாமாக முன்வந்து அளித்துள்ளார் கண் தான அறக்கட்டளை தலைவர் சுந்தரராஜன்.அவர் கூறுகையில், எவ்வளவோ சிரமத்துக்கு இடையே, இயற்கை விவசாயம் செய்கின்றனர். இதை நாம்தான் ஊக்கப்படுத்த வேண்டும்.இது இயற்கை விவசாயிகளுக்கு செய்த உதவியாக கருதுகிறேன் என்றார்.

Tags:    

Similar News