உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

தாராபுரம் தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்வு - முதல்-அமைச்சருக்கு தலைவர், கவுன்சிலர்கள் நன்றி

Published On 2023-03-31 04:42 GMT   |   Update On 2023-03-31 04:42 GMT
  • 106 ஆண்டுகள் கடந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் சிறப்பான பணிகள் நடைபெற்று வருகின்றன.
  • நிதி ஆதாரங்கள் இல்லாமல் திணறி வருகிறது.

தாராபுரம் :

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி தொடங்கப்பட்டு சுமார் 106 ஆண்டுகள் கடந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் சிறப்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் தாராபுரம் நகராட்சி பகுதியில் தற்போதைய மக்கள் தொகை சுமார் 1½ லட்சத்தை கடந்துள்ளது. இதனால் தாராபுரம் நகராட்சி பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகள், சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட வசதிகள் அமைய போதுமான நிதி ஆதாரங்கள் இல்லாமல் திணறி வருகிறது. இந்த நிலையில் தாராபுரம் நகராட்சியை தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தக்கோரி நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன், நகராட்சி கவுன்சிலர்கள் ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்து இருந்தனர்.

அதனை ஏற்று நேற்று சட்டசபை மானிய கோரிக்கையின் போது தாராபுரம் நகராட்சி தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு,செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலக்குழு தலைவரும், தி.மு.க.திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளருமான இல.பத்மநாபன் ஆகியோருக்கு தாராபுரம் நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன், நகர செயலாளர் டி.எஸ்.முருகானந்தம், நகராட்சி கவுன்சிலர்கள், தாராபுரம் பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News