உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்ட கிறிஸ்தவர்கள். 

திருச்சபை கட்ட அனுமதி மறுப்பதை கண்டித்து வாக்காளர் அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம் நடத்திய கிறிஸ்தவர்கள்

Published On 2022-11-07 10:39 GMT   |   Update On 2022-11-07 10:39 GMT
  • போதகர் அருண் அந்தோணி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
  • சபை கட்டுவதற்கு அனுமதிக்கோரி கலெக்டரையும், வருவாய்துறை அதிகாரிகளையும் சந்தித்து மனு கொடுத்து வந்தார்.

திருப்பூர் :

திருப்பூர் மண்ணரை பகுதியை சேர்ந்தவர் அருண் அந்தோணி. சபை போதகர். இவர் அதே பகுதியில் பெத்தேல் ஏ.ஜி.சபை என்ற திருச்சபையை நடத்தி வருகிறார். இந்தநிலையில் சபைக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்காக கடந்த 2021-ம் ஆண்டு ஊத்துக்குளி ரோடு சர்க்கார் பெரியார்பாளையம் பகுதியில் இடம் வாங்கி, சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பணிகளை தொடங்கியபோது, ஒருசிலர் சபை கட்டுமான பணி நடந்த இடத்திற்குள் அத்துமீறி நுழைந்து, கட்டுமான பணிகளை தடுத்ததுடன், அருகில் அரசுக்கு சொந்தமான இடத்தில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்தனர்.

இதுதொடர்பாக போதகர் அருண் அந்தோணி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். மேலும் சபை கட்டுவதற்கு அனுமதிக்கோரி கடந்த பல மாதங்களாக கலெக்டரையும், வருவாய்துறை அதிகாரிகளையும் சந்தித்து மனு கொடுத்து வந்தார். இந்த நிலையில் சொந்த இடத்தில் திருச்சபை கட்ட தொடர்ந்து அனுமதி மறுப்பதை கண்டித்தும், கிறிஸ்தவர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்படும் அதிகாரிகளின் செயல்களை கண்டித்தும் பெத்தேல் ஏ.ஜி. சபை போதகர் அருண் அந்தோணி தலைமையில் சபை மக்கள் 50-க்கும் மேற்பட்டோரும், அனைத்து கிறிஸ்தவ சபை போதகர்களும் திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் திருப்பூர் மாவட்டத்தில் கிறிஸ்தவ சபைகள் கட்டுவதற்கு அனுமதி மறுக்கப்படுவதையும், சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுவதையும் தமிழக அரசுக்கு தெரியப்படுத்தும் வகையில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை ஒப்படைக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News