உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

கிராம காவல் அலுவலர் திட்டம் குறித்து விழிப்புணர்வு

Published On 2023-07-20 12:24 IST   |   Update On 2023-07-20 12:24:00 IST
  • சில ஆண்டுகளுக்கு முன் கிராம காவல் அலுவலர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வந்தது.
  • அசம்பாவிதம் குறித்த தகவலை உடனுக்குடன் தெரிவிக்கவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் காவல்துறை மாநகர், புறநகர் என 2 பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. எஸ்.பி., கட்டுப்பாட்டில் உள்ள புறநகர் பகுதியில் அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை என 5 சப்-டிவிஷன்களை உள்ளடக்கி காவல் நிலையங்கள் இயங்கி வருகிறது.

புறநகரில் உள்ள கிராம புறங்களில் மது, கஞ்சா விற்பனை, திருட்டு, அடிதடி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து உள்ளது. இதுபோன்ற மற்றும் பிற அசம்பாவிதங்களை தடுக்கும் நோக்கத்திலும், பொதுமக்களுக்கும் போலீசாருக்குமிடையே நல்லுறவு ஏற்படும் வகையிலும் சில ஆண்டுகளுக்கு முன் கிராம காவல் அலுவலர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வந்தது.

குறிப்பிட்ட கிராமங்களுக்கு ஒரு போலீசார் நியமிக்கப்பட்டு ஊரில் உள்ள முக்கிய பிரமுகர்கள், அரசு அலுவலர்கள், வாலிபர்கள் முன்னிலையில் கூட்டம் நடத்தி அந்த பகுதிக்கென நியமிக்கப்பட்ட காவலர் அறிமுக கூட்டம் நடத்தப்பட்டது. மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற இத்திட்டம் காலப்போக்கில் காணாமல் போனது.

சமீபத்தில் பொறுப்பேற்ற எஸ்.பி., சாமிநாதன், இந்த திட்டத்தை மீண்டும் அமல்படுத்தினார். போலீஸ் நிலையம் வாரியாக இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மக்கள் மத்தியில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஊரில் பொது இடங்களில் போலீசார் பெயர், தொடர்பு எண் மற்றும் போட்டோவுடன் கூடிய அறிவிப்பு பலகை அமைக்கப்பட்டு வாட்ஸ் அப் குழுவை போலீசார் உரு வாக்கியுள்ளனர். இதில் ஊரில் நடக்கும் திருவிழா, விளையாட்டு போட்டி, பிரச்னை, அசம்பாவிதம் குறித்த தகவலை உடனுக்குடன் தெரிவிக்கவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதற்காக ஒரு மாதமாக நிலையம் வாரியாக இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் கிராமங்களுக்கு சென்று இத்திட்டம் தொடர்பாக மக்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News