சின்ன வெங்காய ஏற்றுமதிக்கு தனி குறியீட்டு எண் வழங்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
- இந்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதித்து கடந்த 16 ந் தேதி உத்தரவிட்டுள்ளது.
- சின்ன வெங்காயம் உற்பத்தி செய்ய எவ்வித மானியமும், சலுகைகளும் அளிக்கப்படுவதில்லை.
உடுமலை:
சின்ன வெங்காய ஏற்றுமதி முடங்கி கிடப்பதைத் தவிா்க்க அதற்கு தனி ஏற்றுமதி குறியீட்டு எண் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தைச் சோ்ந்த வெள்ளக்கோவில் ஆா். பி. சாமி கூறியதாவது:-
இந்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதித்து கடந்த 16 ந் தேதி உத்தரவிட்டுள்ளது. இதில் வெங்காயம் என்பது பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் இரண்டும் ஒன்றாகவே உள்ளது. பெரிய வெங்காயம் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பயன்பாட்டில் உள்ளது. இதன் விலை ஏற்றத் தாழ்வு என்பது இந்திய அளவிலான பிரச்னையாகும்.
ஆனால் சின்ன வெங்காயம் என்பது தமிழ்நாட்டின் கோவை, திருப்பூா், ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, அரியலூா், பெரம்பலூா், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மட்டுமே விளைவிக்கக் கூடியது. தமிழா்கள் வாழ்ந்து வரும் வெளிநாடுகளுக்கு மட்டுமே சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்திய அரசு பெரிய வெங்காயத்தோடு ஒப்பீடு செய்து, ஒவ்வொரு முறையும் தடைகளை விதித்தும், வரிகளை விதித்தும் தமிழ்நாட்டு சின்ன வெங்காய விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.
ஏற்றுமதி செய்யப்படும் போது கொடுக்கப்படும் குறியீட்டு எண் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் இரண்டுக்கும் ஒரே எண்ணாக இருந்து வருகிறது. சின்ன வெங்காயத்துக்கு தனி ஏற்றுமதி குறியீட்டு எண் உருவாக்க வேண்டுமென்கிற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் குறைந்தபட்ச உற்பத்திச் செலவு 30 ரூபாயாகும். விவசாயிகள் கிலோ ரூ. 45க்கு விற்றால் மட்டுமே நஷ்டம் இல்லாமல் தப்பிக்க முடியும். ஆனால் தற்போதைய ஏற்றுமதி வரி விதிப்பு கிலோவுக்கு 20 ரூபாயைக் குறைத்துள்ளது.
சின்ன வெங்காயம் உற்பத்தி செய்ய எவ்வித மானியமும், சலுகைகளும் அளிக்கப்படுவதில்லை. நஷ்டத்துக்கு நிவாரணமும் இல்லை. அப்படியிருக்க வரி விதிக்க எவ்வித தாா்மீக உரிமையும் கிடையாது. கஷ்டப்படும் விவசாயிகளைக் கண்டு கொள்ளாமல், நுகா்வோரை மட்டுமே அரசு கருத்தில் கொள்கிறது.
ஏற்றுமதி தரத்தில் சந்தை நிலவரத்தை அனுசரித்து கொள்முதல் செய்யப்பட்ட சின்ன வெங்காயங்களை ஏற்றுமதி செய்ய இயலாமல் வியாபாரிகளும் தவித்து வருகின்றனா்.
எனவே, வரி விதிப்பை ரத்து செய்வதுடன், சின்ன வெங்காயத்துக்கு தனியாக ஏற்றுமதி குறியீட்டு எண்ணையும் விரைந்து வழங்க வேண்டும் என்றாா்.