வீடுகளில் புகுந்த 2 பாம்புகள் பிடிபட்டது
- வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
- காப்பு காட்டில் விடப்பட்டது
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அருகே புள்ளானேரி கிராமத்தில் வசித்து வரும் கனகராஜ் என்பவரின் வீட்டினுள்ளே திடிரென சத்தத்துடன் பாம்பு நுழைந்தது இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியேறினார்.
இது குறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் பதுங்கியிருந்த 5 அடி நீளமுள்ள சாரை பாம்பை பிடித்து திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதனை பெற்றுக் கொண்ட வனத்துறையினர் அருகில் உள்ள ஏலகிரி மலை காப்பு காட்டில் விட்டனர்.
இதேபோல் நாட்டறம்பள்ளி அருகே சின்னூர் பகுதியில் வசித்து வரும் சீனு என்பவரின் வீட்டில் பாம்பு நுழைந்தது கண்டு உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ஞான ஒளிவு தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனை பெற்றுக் கொண்ட வனத்துறையினர் அருகில் உள்ள காப்பு காட்டில் விட்டனர்.