திருவாரூரில் நள்ளிரவில் நகைக்கடையில் தீ விபத்து- தங்கம், வெள்ளி நகைகள் எரிந்து சேதம்
- மின் கசிவு ஏற்பட்டு கடை முழுவதும் தீ பிடித்த எரிய தொடங்கியது.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:
திருவாரூர் துர்காலயா சாலையை சேர்ந்த மகாலிங்கம் மகன் அசோக்குமார். இவர் எல்லையம்மன் கோவில் சன்னதி தெருவில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
இந்த நிலையில் நள்ளிரவில் திடீரென கடையில் வைக்கப்பட்டிருந்த யு.பி.எஸ் பேட்டரியில் மின் கசிவு ஏற்பட்டு கடை முழுவதும் தீ பிடித்த எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் கடை முழுவதும் மளமளவென பற்றி எரிந்தது.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர்.
இதில் பெரும்பாலான தங்க நகைகள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்ததால் தப்பித்தது. இருந்தாலும் கடை ராக்கரில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், பொருட்கள் தீயில் உருகி சேதமானது என்று நகைக்கடை உரிமையாளர் தெரிவித்தார்.
இந்த தீ விபத்து குறித்த புகாரின் பேரில் திருவாரூர் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.