உள்ளூர் செய்திகள்

சாராய கடையை முற்றுகையிட்ட பெண்கள்.

சாராய கடையை அடித்து நொறுக்கிய பெண்கள்

Published On 2022-06-29 10:06 GMT   |   Update On 2022-06-29 10:06 GMT
  • ராமசாமி என்பவர் அவரது மனைவியின் தாலி செயினை சாராய வியாபாரி முத்துகிருஷ்ணனிடம் அடகு வைத்து சாராயம் குடித்துள்ளார்.
  • சாராயம் பதுக்கி வைத்திருந்த கூரை கொட்டகையை அடித்து நொறுக்கி சாராய பாக்கெட் மற்றும் கலவை போட வைத்திருந்த பாத்திரங்களை சாலையில் போட்டு உடைத்தனர்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம், வலிவலம் காவல் சரகத்திற்குட்பட்ட ஆதமங்கலம் ஊராட்சி கீழ கண்ணாப்பூர் பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் கூடும் இடங்களில் சாராயம் விற்று வருகிறார்.

இதுகுறித்து வலிவலம் காவல் நிலையத்தில் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவர் அவரது மனைவியின் தாலி செயினை சாராய வியாபாரி முத்துகிருஷ்ணனிடம் அடகு வைத்து சாராயம் குடித்துள்ளார். இந்த நிலையில் அவரது மனைவி தாலிச் செயினை கேட்டுச் சென்ற போது தாலி செயினை கொடுக்காமல் தகாத வார்த்தையால் பேசி தாக்கியுள்ளார்.

இதில் காயமடைந்த அவர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இது குறித்தும் வலிவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கு எடுக்காத்தால் ஆத்திரமடைந்த கிராம பெண்கள் ஒன்று திரண்டு முத்து கிருஷ்ணனை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்க சென்றனர்.அப்போது சாராய வியாபாரி தப்பித்து ஓடிய நிலையில் சாராயம் பதுக்கி வைத்திருந்த கூரை கொட்டகையை அடித்து நொறுக்கி சாராய பாக்கெட், மற்றும் கலவை போட வைத்திருந்த பாத்திரங்களை சாலையில் போட்டு உடைத்து அதிரடி நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.மேலும் கூரை கொட்டகையை வெட்டி சாய்த்தனர். சாராய கடையை அந்த பகுதி மாதர் சங்க பெண்கள் அடித்து நொறுக்கி சாராய மூட்டைகளை சாலையில் வீசிய சம்பவம் அந்த பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாகை மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புதுச்சேரி மதுபானங்கள் மற்றும் சாராயத்தை கடத்தி வந்து விற்பனை செய்பவர்கள் மீதும் அதற்கு துணைபோகும் நபர் மீதும் மாவட்ட கலெக்டர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் உடனடி நடவடிக்கை எடுத்து சாராயம் இல்லாத நாகை மாவட்டத்தை உருவாக்க வேண்டும் எனவும் பெண்களுக்கும், பொது மக்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News