உள்ளூர் செய்திகள்

வண்ணார்பேட்டையில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்தபடம்.

மழைக்கால நிவாரணம் ரூ.5,000 வழங்காததை கண்டித்து மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-03-27 14:27 IST   |   Update On 2023-03-27 14:28:00 IST
  • மாநில தலைவர் டாக்டர் சேம நாராயணன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
  • 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

நெல்லை:

மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகை வழங்காமல் தாமதப்படுத்துவதை கண்டித்து நெல்லை மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் சங்கத்தினர் இன்று வண்ணார்பேட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் சங்க மாவட்ட தலைவர் முருகானந்த வேளார் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் அய்யப்பன், பொருளாளர் பிச்சாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில தலைவர் டாக்டர் சேம நாராயணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் தலையில் மண் பானையை சுமந்தபடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

கடந்த 2022-ம் ஆண்டு மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய மழைக்கால நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரம் இன்று வரை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படவில்லை. இந்த மாவட்டத்தில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். மழைக்காலம் முடிந்தும் இன்று வரை அவர்களுக்கு பணம் வந்து சேரவில்லை. அதனை உடனடியாக வழங்கி எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

மின்சாரத்தால் இயங்கக்கூடிய மின்விசை சக்கரம் வழங்கிட வேண்டும். நாங்கள் மண்பாண்டங்கள் செய்வதற்கு களிமண் விரைவாக கிடைக்கவும், சூளை வைக்கும் இடத்திற்கு அடிமனை பட்டா வழங்கிடவும், தயார் செய்த சுட்ட மண்பாண்ட பொருட்களை விற்பனை செய்வதற்கு 150 சதுர அடி அளவுள்ள சிறிய இடத்தினை ஒதுக்கீடு செய்து தரவும் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கிறோம்.

மேலும் வீட்டு வசதி திட்டத்தின் மூலமாக கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.4 லட்சம் மானியம் வழங்கியது போல மண்பாண்ட தொழிலாளர்களுக்கும் ரூ.4 லட்சம் மானியம் வழங்க வேண்டும். மண்பாண்ட தொழிலை மேம்படுத்த தொழிற்பயிற்சி கூடம் அமைத்து தர வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆர்ப்பாட்டத்தில் துணைத் தலைவர்கள் மந்திரமூர்த்தி, அய்யப்பன், ஆறுமுகம், கவுரவ தலைவர் கணேசன், துணைச் செயலாளர்கள் மாரியப்பன், ஆறுமுகம், துரை, மாநகர செயலாளர் பேராட்சி செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முருகன், மணி, இளைஞரணி கார்த்தீசன் மற்றும் நிர்வாகிகள் முனியசாமி, கிருஷ்ணன் ராஜ், ஆனந்தராஜ், முத்துராமன், கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து அவர்கள் தலையில் மண்பானையை சுமந்தபடி கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று மனு அளித்தனர்.

Tags:    

Similar News