உள்ளூர் செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

மக்களின் கவலைகளைப் போக்கும் அரசாக திமுக அரசு திகழ்கிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2022-07-08 18:28 GMT   |   Update On 2022-07-08 18:30 GMT
  • ஆராஞ்சி கிராமத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடக்கம்.
  • அருணாசலேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார்களுக்கு நலத்திட்ட உதவி.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக திருவண்ணாமலை சென்றார். மாவட்ட எல்லையான கீழ்பென்னாத்தூரில் மாவட்ட தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து மேளதாளத்துடன் பிரம்மாண்டமாக வரவேற்றனர்.

கீழ்பென்னாத்தூர் தாலுகா ஆராஞ்சி கிராமத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டம் நிகழ்ச்சியை அவர் தொடங்கி வைத்தார். இது தமிழகத்தில் 2 லட்சமாவது இல்லம் தேடி கல்வி மையமாகும்.

தொடர்ந்து மாலையில் திருவண்ணாமலை மாடவீதி பெரிய தெருவில் உள்ள பழைய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார். 

பின்னர் திருவண்ணாமலை வேலூர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அண்ணா நுழைவு வாயிலை திறந்து வைத்த முதலமைச்சர், பின்னர் வெண்கலத்தினால் செய்யப்பட்ட கருணாநிதியின் உருவச்சிலையையையும் திறந்து வைத்தார். கிரிவலப்பாதையில் திருவண்ணாமலை நகரத்தை நோக்கியபடி கருணாநிதி சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஈசான்ய மைதானத்தில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களின் கவலைகளைப் போக்கும் அரசாக திராவிட மாடல் அரசு திகழ்ந்து வருகிறது என்றார். தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், அண்ணாவின் ஆசைகள், கலைஞரின் கனவுகளை நிறைவேற்றிய திருப்தி தமக்கு உள்ளது என்றும் குறிப்பிட்டார்.  

முதலமைச்சரின் வருகையையொட்டி திருவண்ணாமலையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏடிஜிபி தாமரைக்கண்ணன் தலைமையில் ஒரு ஐஜி, 3 டி.ஐ.ஜி., 7 போலீஸ் சூப்பிரண்டு உட்பட 2,200 போலீசார் திருவண்ணாமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News