உள்ளூர் செய்திகள்

ஊராட்சி செயலாளரை 'டிஸ்மிஸ்' செய்ய வலுத்து வரும் கோரிக்கை

Published On 2023-10-03 04:36 GMT   |   Update On 2023-10-03 04:36 GMT
  • ஊராட்சி செயலாளர் நடந்துகொண்ட விதம் கிராம வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டை போடுவதாகவும், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது.
  • சர்வாதிகார போக்குடன் நடந்துகொள்ளும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாய வேண்டும்

கிராமங்கள் தன்னிறைவு பெற்றதால் நாடு வளர்ச்சி அடையும் என்பது தேசப்பிதா மகாத்மா காந்தியின் கூற்று. அதன்படி கிராமங்களின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்வதில் அரசு மிகுந்த கவனம் காட்டி வருகிறது. கிராம மக்களின் குரல் எப்போதும், எந்த சூழலிலும் தடையில்லாமல் ஒலிக்க வேண்டும். அதற்காகத்தான் கிராம சபை கூட்டங்களை தமிழக அரசு தடையின்றி நடத்துகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் தெரிவித்தார்.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சி சமுதாயத்தின் வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும். அதனை செயல்படுத்த வேண்டுமென்றால் கிராமங்கள் முழுமையான வளர்ச்சியை பெற வேண்டும். இதனை மனதில் வைத்துத்தான் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம் என்றும் தெரிவித்து இருந்தார்.

ஆனால் இதற்கெல்லாம் கரும்புள்ளி வைக்கும் விதமாக நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடந்த கிராம சபை கூட்டத்தில் விவசாயி ஒருவர், ஊராட்சி செயலாளரால் எட்டி உதைக்கும் அவலம் அரங்கேறியுள்ளது. அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஊராட்சி செயலாளர் நடந்துகொண்ட விதம் கிராம வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டை போடுவதாகவும், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது.

இதுபோன்ற சர்வாதிகார போக்குடன் நடந்துகொள்ளும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாய வேண்டும் என்றும், அந்த வகையில் சட்டமன்ற உறுப்பினர், வட்டார வளர்ச்சி அதிகாரி, பொதுமக்கள் முன்னிலையில் குறைகளை சபைக்கு எடுத்துவைத்த விவசாயியை காலால் எட்டி உதைத்த ஊராட்சி செயலரை கைது செய்வதோடு மட்டுமின்றி, டிஸ்மிஸ் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பு. இந்த கோரிக்கை வலுத்தும் வருகிறது.

Tags:    

Similar News