குன்னூர் கரன்சி தடுப்பணையை தூர்வார வேண்டும்- பொதுமக்கள் நகராட்சிக்கு கோரிக்கை
அருவங்காடு,
குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளது. சுமார் 6000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. நகரப் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய ரேலியா அணை மற்றும் பந்திமை அணை, எமரால்டு அணையில் இருந்தும் குடிநீர் குழாய்கள் மூலம் கொண்டுவரப்பட்டு கிரேசில் நீர் தேக்க தொட்டியில் சேகரித்து சுத்திகரிக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு வார்டுகளுக்கும் முறை வைத்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நகரப் பகுதியில் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் குன்னூர் அருகே உள்ள கரன்சி வனப்பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டு அங்கிருந்து குழாய்கள் மூலமாகவும் குடிநீர் நகரப் பகுதிக்கு கொண்டு வந்து விநியோகிக்கப்பட்டு வந்தது.
ஆனால் கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்து வருவதால் இந்த தடுப்பனையில் தண்ணீர் அதிக அளவில் வந்து சேறும் சகதியும் ஆக மாறிவிட்டது.
தற்போது இங்கிருந்து நகரப் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்ல இயலவில்லை. எனவே நகராட்சி நிர்வாகம் இந்தத் தடுப்பணையை தூர்வார வேண்டுமென குன்னூர் நகரவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.