உள்ளூர் செய்திகள்

கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று தொடங்கியது

Published On 2023-02-22 09:36 GMT   |   Update On 2023-02-22 09:36 GMT
  • ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
  • கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் நோன்பிருந்து, ஏழைகளுக்கு உதவிகள் செய்வது வழக்கம்.

கோவை,

ஏசு கிறிஸ்துவை சிலுவையில் அறையப்ப ட்டதை நினைவு கூறும் வகையில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் நோன்பிருந்து, ஏழைகளுக்கு உதவிகள் செய்வது வழக்கம். இந்த நாட்களை அவர்கள் ஆண்டுதோறும் தவக்காலமாக கடைபிடித்து வருகிறார்கள். இந்த தவக்காலம் சாம்பல் புதன் தினத்தில் இருந்து தொடங்குகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான சாம்பல் புதன் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது.

இதனையொட்டி கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்கள் அனைத்திலும் காலையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இந்த சிறப்பு திருப்பலியின் போது கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பல் பூசப்பட்டது.

கோவை பெரிய கடை வீதி தூய மைக்கேல் பேராலயத்தில் திருப்பலி ஆராதனை நடைபெற்று. அனைவரின் நெற்றியிலும் சாம்பல் பூசப்பட்டது. பேராலய பாதிரியார்கள் சிறப்பு திருப்பலி, ஆராதனை மேற்கொண்டு அனைவரின் நெற்றியிலும் சாம்பலை பூசினார்.

இன்று தொடங்கிய இந்த நோன்பானது ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நாளாக கருதப்படும் புனித வெள்ளி தினத்திற்கு அடுத்த சனிக்கிழமை வரை கடைபிடிக்கப்படும். புனித வெள்ளிக்கு பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும் என ஆலயத்துக்கு வந்த கிறிஸ்தவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News