உள்ளூர் செய்திகள்

ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரேஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-06-08 10:07 GMT   |   Update On 2022-06-08 10:07 GMT
  • தஞ்சையில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக 825 கடைகள் திறக்கப்படவில்லை. 72 கடைகள் மட்டுமே திறக்கபட்டது.

தஞ்சாவூர்:

பொது வினியோக திட்டத்திற்காக தனித்துறையை உருவாக்க வேண்டும். 5 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட 17 சதவீத அகவிலைப்படியையும் சேர்த்து அரசு பணியாளர்களுக்கு வழங்கக்கூடிய 31 சதவீத அகவிலைப்படியை, நியாய விலைக்கடை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும்.

ஒரே மாதிரியான ஊதிய உயர்வு வழங்க வேண்டும். சரியான எடையில் தரமான பொருட்கள் அனைத்தும் பொட்டலமாக வழங்க வேண்டும்.

மாத இறுதி தேதியில் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளர்கள் 4 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் நேற்று ரேஷன்கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். அதன்படி இன்று தஞ்சை பாலாஜி நகரில் உள்ள மண்டல இணைபதிவாளர் அலுவலகம் முன்பு ரேஷன் கடை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேப்போல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது குறித்து நியாயவிலை கடை பணியாளர் சங்க மாநில துணை தலைவர் ராமலிங்கம் கூறும்போது:-

தஞ்சை மாவட்டத்தில் 1,184 ரேஷன்கடைகள் உள்ளன. இதில் இன்று 897 கடைகள் திறந்திருக்க வேண்டும். ஆனால் ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக 825 கடைகள் திறக்கப்படவில்லை. 72 கடைகள் மட்டுமே திறக்கபட்டது என்றார்.

ரேஷன் கடை ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் பெரும்பாலான கடைகள் பூட்டப்பட்டிருந்தன. இதனால் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

Tags:    

Similar News