உள்ளூர் செய்திகள்

'யூடியூப்'பில் வெளியான புது வீட்டு வீடியோ பார்த்து கொள்ளையடிக்க புறப்பட்டு சென்ற வாலிபர்

Published On 2023-01-23 17:17 IST   |   Update On 2023-01-23 17:17:00 IST
  • கதவை திறந்து சுஹைல் வெளியில் வந்ததும் அனுராம் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டான்.
  • வீட்டில் திருடன் சிக்கிய வீடியோவையும் விலாவாரியாக விளக்கி புதிய வீடியோ ஒன்றை யூடியூபர் சுஹைல் வெளியிட்டுள்ளார்.

கோவை:

சினிமா நட்சத்திரங்களுக்கு போட்டியாக இன்று சமூக வலைதளங்களில் யூ டியூபர்கள் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். ஏதாவது ஒரு பெயரில் 'யூ டியூப் சேனல்' ஒன்றை தொடங்கி அதில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியோ, இல்லை வீட்டில் இருப்பவர்களுடன் வீடியோ எடுத்தோ வெளியிடுகிறார்கள். சப்ஸ்கிரைபர்கள் அதிகரிக்க... அதிகரிக்க யூ டியூபர்களின் வாழ்வில் பணமழை கொட்ட தொடங்கி விடுகிறது. சினிமா நட்சத்திரங்களை போன்று புகழ் வெளிச்சமும் கிடைக்க தொடங்கி விடுகிறது.

இதனால் யூ டியூப் சேனல்களை தொடங்குவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. யூடியூப் சேனல்களை நடத்துவோர் தங்களின் ஒவ்வொரு அசைவுகளையும் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டு வருகிறார்கள்.

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சுஹைல் என்பவர் 2 யூடியூப் சேனல்களை நடத்தி வருகிறார். "சுஹைல் விவாகர்", "சைபர் தமிழா" ஆகிய பெயர்களில் இவர் நடத்தி வரும் யூடியூப் சேனல்களில் பல வீடியோக்களை போட்டுள்ளார். தனது வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகள், சிறுவர்களின் விளையாட்டுகள் தொடர்பாகவும் வீடியோ எடுத்து தனது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்து வருகிறார்.

இந்நிலையில் கோவை கே.ஜி.சாவடி பிச்சனூர் பகுதியில் சுஹைல் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு புதிய வீடு ஒன்றை கட்டினார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை எடுத்து தனது வீட்டுக்கு வழிகாட்டும் வகையில் விரிவான தகவல்களை அதில் தெரிவித்து இருந்தார்.

சுஹைலின் யூடியூப் சேனலை லட்சக்கணக்கானோர் பின் தொடர்ந்து கவனித்து வருகிறார்கள். 19½ லட்சம் பேர் "சப்ஸ் கிரைப்" செய்து சுஹைலின் வீடியோக்களை லைக் செய்து வந்துள்ளனர்.

புதிதாக தான் கட்டியுள்ள வீடு தொடர்பாக சுஹைல் போட்டிருந்த வீடியோவில் தனது வீட்டில் என்னென்ன வசதிகள் உள்ளன. பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன என்பது போன்ற விஷயங்களையெல்லாம் தெரிவித்து இருந்தார். இதனை பலர் லைக் செய்து கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த ஏ.சி. மெக்கானிக்கான அனுராம் என்ற 25 வயது வாலிபரும் சுஹைலின் யூடியூப் சேனலுக்கு மிகப் பெரிய ரசிகராக இருந்துள்ளார். சுஹைல் போட்டிருந்த புது வீடு வீடியோவை அனுராமும் பார்த்தார். அப்போது அவருக்கு கோவையில் உள்ள சுஹைலின் வீட்டுக்கு சென்று கொள்ளையடிக்கும் எண்ணம் ஏற்பட்டது.

இதையடுத்து புதுச்சேரியில் இருந்து அவர் கோவைக்கு பயணமானார். சுஹைலின் புது வீட்டுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணி அளவில் சென்ற அனுராம் நைசாக வீட்டுக்குள் புகுந்தார். பின்னர் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று படுத்து தூங்கினார்.

பின்னர் அனுராம் நேற்று காலை 6 மணி அளவில் எழுந்தார். மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்கிய அனுராம் வீட்டின் கதவை தட்டியுள்ளார். கதவை திறந்து சுஹைல் வெளியில் வந்ததும் அனுராம் மறைத்த வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டான். இதனால் அதிர்ச்சி அடைந்த சுஹைல் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கொள்ளையன் அனுராமை பொறி வைத்து மடக்கி பிடித்தார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் கோவை கே.ஜி. சாவடி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கையும் களவுமாக மாட்டிய கொள்ளையன் அனுராமை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே தனது வீட்டில் திருடன் சிக்கிய வீடியோவையும் விலாவாரியாக விளக்கி புதிய வீடியோ ஒன்றை யூடியூபர் சுஹைல் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். இதுவும் 'லைக்'குகளை அள்ளிக் கொண்டிருக்கிறது. 'யூ டியூபர்'னா சும்மாவா...?

Tags:    

Similar News