களக்காடு அருகே கடையில் திருடிய வாலிபர் கைது
- ஜான்சன் பழைய இரும்பு பொருட்கள் கடை நடத்தி வருகிறார்.
- கடையில் திருடியது ஜெயசெல்வன் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள மாவடி, கீழத்தெருவை சேர்ந்தவர் ஜான்சன் (வயது 43). இவர் மலையடிபுதூர் ஊருக்கு அருகே பழைய இரும்பு பொருட்கள் கடை நடத்தி வருகிறார். கடந்த 15-ந்தேதி இரவில் ஜான்சன் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இரவில் மர்மநபர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, ரூ. 7ஆயிரம் மதிப்புள்ள இரும்பு கம்பிகள் மற்றும் செம்பு கம்பிகளை திருடி சென்று விட்டார். மறுநாள் காலையில் கடைக்கு வந்த ஜான்சன் கடை உடைக்கப்பட்டு, கம்பிகள் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி அவர் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷினி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார். இதில் கடையில் திருடியது மேலமாவடி, நாராயண சுவாமி கோவில் தெருவை சேர்ந்த பால கிருஷ்ணன் மகன் ஜெயசெல்வன் (30) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கம்பிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.