உள்ளூர் செய்திகள்

தேவகோட்டை அருகே வாலிபர் குத்திக்கொலை- தொழிலாளி வெறிச்செயல்

Published On 2022-08-19 12:42 IST   |   Update On 2022-08-19 12:42:00 IST
  • புதிய கோவில் கட்டுவது தொடர்பாக ஊர் கூட்டம் நடந்து முடிந்த நிலையில், அதில் பங்கேற்ற வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் கல்லல் ராமநாயக்கர் ஏந்தல் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
  • கொலை குறித்து கல்லல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேவகோட்டை:

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கல்லல் ராமநாயக்கர் ஏந்தல் கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் குலதெய்வம் ஆகும்.

இந்த நிலையில் தங்களது ஊரிலேயே புதிதாக அழகருக்கு கோவில் கட்ட கிராமமக்கள் முடிவு செய்தனர். இதற்காக இன்று காலை அழகர் கோவில் சென்று அங்கிருந்து பிடிமண் எடுத்து வர திட்டமிட்டிருந்தனர். ஊரில் புதிய கோவில் கட்டுவதற்கான ஊர் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் ஊர் மக்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் ஊர் கூட்டம் முடிந்து அனைவரும் வீட்டிற்கு சென்றபடி இருந்தனர். அப்போது பெரியசாமி என்பவரின் மகன் ராஜேஷ் (வயது21) என்பவரும், சந்திரன் என்பவரின் மகன் மெய்யரும் பேசிக்கொண்டிருந்தனர்.

வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த ராஜேஷ் தற்போது விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தார். மெய்யர் அதே ஊரில் இருந்து கூலி வேலைக்கு சென்று வந்தார். விளையாட்டாக பேசிக்கொண்டிருந்த அவர்கள் இருவருக்கு இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது.

அப்போது ஆத்திரமடைந்த மெய்யர், கத்தியால் ராஜேசின் கழுத்துப்பகுதியில் குத்தினார். இதில் படுகாயமடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து மெய்யர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

ஊர் கூட்டம் நடந்து முடிந்த நிலையில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கல்லல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

மேலும் தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமாரும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து ராஜேசின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

புதிய கோவில் கட்டுவது தொடர்பாக ஊர் கூட்டம் நடந்து முடிந்த நிலையில், அதில் பங்கேற்ற வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் கல்லல் ராமநாயக்கர் ஏந்தல் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கொலை குறித்து கல்லல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைமறைவாகிவிட்ட கொலையாளி மெய்யரை தேடி வருகின்றனர். அவரை பிடிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

ஊரில் புதிய கோவில் கட்டும் முயற்சியில் ஈடுபட்ட போது கிராமத்துக்குள் கொலை நடந்துள்ளது அந்த கிராம மக்களிடையே பெரும் வருத்தத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News