மனைவியை தவறாக பேசியதை தட்டிக்கேட்ட வாலிபர் கத்தியால் குத்திக்கொலை- கட்டிட தொழிலாளி வெறிச்செயல்
- அண்ணாமலை, பிரவீன் மனைவிக்கும் வாலிபர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக அக்கம் பக்கத்தினரிடம் கூறி வந்தார்.
- பிரவீன் அண்ணாமலையை எச்சரித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் கடந்த 3 மாதங்களாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
திருப்பூர்:
மயிலாடுதுறை மாவட்டம் திருப்பனந்தாள் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (வயது 33). இவரது மனைவி ராணி (32). இவர்களுக்கு ராகுல் (13) என்ற மகனும், ராகவி (11) என்ற மகளும் உள்ளனர்.
கணவன்-மனைவி இருவரும் கட்டிட வேலைக்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் பல்லடம் பகுதிக்கு வந்தனர். இதையடுத்து திருப்பூர் மாஸ்கோ நகர் துவாரகை நகர் 3-வது வீதியில் உள்ள வாடகை வீட்டில் குழந்தைகளுடன் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தனர். அவர்களது வீட்டின் எதிரே மற்றொரு கட்டிட தொழிலாளியான தர்மபுரி பாப்பிரெட்டிபட்டியை சேர்ந்த அண்ணாமலை(40) தங்கியிருந்து வந்தார்.
இந்தநிலையில் அண்ணாமலை, பிரவீன் மனைவிக்கும் வாலிபர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக அக்கம் பக்கத்தினரிடம் கூறி வந்தார். இதையறிந்த பிரவீன் அண்ணாமலையை எச்சரித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் கடந்த 3 மாதங்களாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
நேற்றிரவு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அண்ணாமலை வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து பிரவீனை சரமாரியாக குத்தினார். இதில் அவரது உடலில் பல்வேறு இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது பிரவீன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் தேடுவதை அறிந்ததும் அண்ணாமலை தப்பியோடிவிட்டார். இந்தநிலையில் மண்ணரை ஊத்துக்குளி சாலை பகுதியில் அண்ணாமலையை போலீசார் மடக்கினர். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.