பாம்பன் பகுதியில் சாட்டிலைட் போனுடன் சிக்கிய வாலிபர் கைது- பயங்கரவாதிகளுடன் தொடர்பா? என போலீசார் விசாரணை
- சாட்டிலைட் போனின் சிக்னல் பாம்பன் அக்காள்மடம் பகுதியில் கிடைத்தது.
- இலங்கையை சேர்ந்தவரின் சாட்டிலைட் போன் எப்படி கிடைத்தது? என்று ஜான்பாலிடம் விசாரணை நடத்தப்பட்டது.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் பகுதியில் ஒருவர் அனுமதியின்றி சார்டிலைட் போனை பயன்படுத்தி வருவதாக சென்னை டி.ஜி.பி. அலுவலகத்துக்கு ரகசிய தகவல் வந்தது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பாம்பன் பகுதியில் சார்டிலைட் போனை பயன்படுத்திவரும் நபரை கண்டுபிடித்து கைது செய்ய அவர் உத்தரவிட்டார். போலீஸ் சூப்பிரண்டு உத்தரவை அடுத்து சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் பாம்பன் குந்துகால் பகுதியில் சோதனை நடத்தினர்.
மேலும் சாட்டிலைட் போன் செயல்பாடு குறித்து கண்காணித்தனர். அப்போது சாட்டிலைட் போனின் சிக்னல் பாம்பன் அக்காள்மடம் பகுதியில் கிடைத்தது. அதனடிப்படையில் அந்த பகுதியில் போலீசார் சோதனை நடத்தினார்கள்.
அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்ற ஒரு வாலிபரை பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், பாம்பன் புயல் காப்பகம் பகுதியை சேர்ந்த ஜான்பால்(வயது25) என்பதும், அவர் வைத்திருந்த சாட்டிலைட் இலங்கையை சேர்ந்த சுந்தரசெல்வம் என்பவருடையது என்பதும் தெரியவந்தது.
இலங்கையை சேர்ந்தவரின் சாட்டிலைட் போன் எப்படி கிடைத்தது? என்று ஜான்பாலிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பாம்பன் குந்துகால் பகுதியில் கிடந்த ஒரு பையில் ஒருவரது இலங்கை குடியுரிமை அடையாள அட்டை, இலங்கை பணம் ரூ.10ஆயிரம் மற்றும் சார்டிலைட் போன் ஆகியவை இருந்ததாகவும், அதனை தான் வைத்துக்கொண்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
சார்டிலைட் போனை சிறப்பு அனுமதி பெற்றவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்ற யாரும் பயன்படுத்த அனுமதி கிடையாது. இருந்தபோதிலும் சட்டவிரோதமாக கடத்தல்காரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் ஜான்பால் சாட்டிலைட் போனுடன் சிக்கியிருக்கிறார்.
அவர் கூறியபடி கீழே கிடந்த பையில் இருந்துதான் சாட்டிலைட் போன் உள்ளிட்டவைகளை எடுத்தாரா? அல்லது அவருக்கு ஏதேனும் பயங்கரவாத கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் ஜான்பாலிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.
முதற்கட்டமாக அனுமதியின்றி சார்டிலைட் போனை பயன்படுத்திய குற்றத்துக்காக ஜான்பாலை போலீசார் கைது செய்தனர்.
மேலும் சாட்டிலைட் போன் உரிமையாளரான இலங்கையை சேர்ந்த சுந்தர செல்வத்துக்கும், ஜால்பாலுக்கும் தொடர்பு உள்ளதா? அதனை மறைப்பதற்காக கீழே கிடந்தது என்று கூறுகிறாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இலங்கையை சேர்ந்தவரின் சார்டிலைட் போனுடன் பாம்பன் வாலிபர் சிக்கியுள்ள சம்பவம் ராமேசுவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.