உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி தொழிலாளி கொலையில் திருப்பம்: மகனே தந்தையை கொன்றது அம்பலம்

Published On 2023-11-17 07:21 GMT   |   Update On 2023-11-17 07:21 GMT
  • வீட்டுக்கு வந்த சின்னத்துரை வீட்டில் மனைவி, பிள்ளைகள் இல்லாததால் ஆத்திரம் அடைந்தார்.
  • தாயை அவதூறாக பேசியதால் தந்தையை கொன்றதாக கூறி உள்ளார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் எம்.ஜி.ஆர். பூங்கா அருகே பொது மையவாடி சுமார் 45 மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று மாலை கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

கொலை செய்யப்பட்டவர் யார்? அவரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் கணேஷபுரத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான சின்னத்துரை(வயது42) என்பது தெரியவந்தது. போலீசாரின் தொடர் விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்து. அதன் விபரம் வருமாறு:-

சின்னத்துரைக்கு திருமணமாகி ராஜேஸ்வரி (38 ) என்ற மனைவியும், 4 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தற்போது ஆறுமுகநேரி அருகே மூலக்கரை செல்லும் சாலையில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். சின்னத்துரை அடிக்கடி குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நிலையில் காணப்பட்ட ராஜேஸ்வரி குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே சென்று விட்டார்.

இந்நிலையில் வீட்டுக்கு வந்த சின்னத்துரை வீட்டில் மனைவி, பிள்ளைகள் இல்லாததால் ஆத்திரம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தில் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப் பார்த்தும் அவர்கள் கிடைக்கவில்லை.

அப்போது அவரது மகன்களில் ஒருவரான 17 வயது மகன் மட்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அவரை அழைத்து கொண்டு சின்னத்துரை பல்வேறு இடங்களில் மனைவி, குழந்தைகளை தேடி உள்ளார். பின்னர் தூத்துக்குடிக்கு வந்து, மையவாடியில் வைத்து மது குடித்துள்ளார். அதிகமான போதை ஏறிய நிலையில் மனைவியை அவர் அவதூறாக பேசி மகனையும் திட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த 17 வயது மகன் அங்கிருந்த அரிவாளால் தன் தந்தையை சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது மகனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் தன் தாயை அவதூறாக பேசியதால் தந்தையை கொன்றதாக கூறி உள்ளார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News