உள்ளூர் செய்திகள்

தியாகதுருகம் அருகே விஷ வண்டு கடித்து கூலித்தொழிலாளி பலி

Published On 2022-06-08 11:19 GMT   |   Update On 2022-06-08 11:20 GMT
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலைக்குச் சென்ற கூலித்தொழிலாளியை விஷ வண்டு கடித்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே தியாகை ஊராட்சியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 52) கூலித்தொழிலாளி, இவர் நேற்று தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அதே பகுதியில் பெரியநாயகி அம்மன் கோவில் அருகே மரக்கன்றுகள் நடுவதற்காக முட்புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவரது காலில் விஷ வண்டு கடித்தது.

இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் இவரை தியாகதுருகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் மோட்டார் சைக்கிளில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆறுமுகம் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து அவரது மனைவி சாந்தாயி தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலைக்குச் சென்ற கூலித்தொழிலாளியை விஷ வண்டு கடித்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News