உள்ளூர் செய்திகள்

செல்வகுமார்

கோவில் படையலில் வைத்திருந்த மதுவை குடித்த தொழிலாளி பலி- மற்றொருவர் உயிர் ஊசல்

Published On 2024-03-02 09:05 GMT   |   Update On 2024-03-02 09:06 GMT
  • கோவில் விழா படையலில் வைக்கப்பட்ட மது அருந்தியவர் பரிதாபமாக இறந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில்:

நாகர்கோவில் வைத்தியநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவின் போது சுவாமிக்கு படையல் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த படையிலில் உணவுடன், மதுபாட்டில்களும் வைக்கப்பட்டதாக தெரிகிறது.

பூஜைகள் முடிந்ததும் படையலில் வைக்கப்பட்ட மதுவை, பூசாரி சிலரிடம் கொடுத்துள்ளார். அதனை வைத்தியநாதபுரம் செல்வகுமார் (வயது 49), வடலிவிளை அருள் ஆகியோர் பெற்றுக்கொண்டு அருகே உள்ள சுடுகாட்டுப் பகுதிக்குச் சென்று சாப்பிட்டார்களாம்.

இந்த நிலையில் அருள் தனது நண்பர்களுக்கு போன் செய்து, மது குடிக்க வந்த விவரத்தையும், அதனை குடித்த பிறகு தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறி உள்ளார். மேலும் உடனே இங்கு வந்து தன்னை காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார்.

இதனை தொடர்ந்து நண்பர்கள் அங்கு சென்ற போது, அருள் மயக்க நிலையில் இருந்துள்ளார். செல்வகுமார் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். அவர்களை மீட்டு ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நண்பர்கள் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், செல்வகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அருள் உடல் நலம் மோசமாக உள்ளதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவில் விழா படையலில் வைக்கப்பட்ட மது அருந்தியவர் பரிதாபமாக இறந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கோட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்வகுமார் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவு வந்த பிறகே எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரியவரும்.

Tags:    

Similar News