உள்ளூர் செய்திகள்

கிராம மக்கள் பலமுறை போராட்டம் நடத்தியும் சீரமைக்கப்படாத சாலை

Published On 2024-03-16 08:52 GMT   |   Update On 2024-03-16 08:52 GMT
  • சாலையில் பள்ளத்தால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. .
  • மணல் சாலையாகவே காட்சி அளிக்கிறது.

பொன்னேரி:

பொன்னேரி- பழவேற்காடு சாலை மெதூரில் இருந்து அரசூர் சாலை வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, காட்டாவூர், ஐயநல்லூர் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் சாலையாக உள்ளது. இதில் விடதண்டலம், மேல பட்டறை, கொள்ளுமேடு பகுதி மக்கள் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் மெதூர்-அரசூர் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த 10 ஆண்டுகளாக இந்த சாலை மிகவும் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக ஜல்லி கற்கள் பெயர்ந்து மணல் ரோடாக காட்சி அளிக்கிறது. போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காணப்படும் சாலையால் பள்ளி கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். சாலையில் பள்ளத்தால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.

இதையடுத்து மெதூர்-அரசூர் சாலையை சீரமைக்க கோரி விடதண்டலம், மேல பட்டறை, கொள்ளுமேடு பகுதி மக்கள் பலமுறை மனு அளித்தும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த சில மாதத்திற்கு முன்பு இந்த கிராமமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் மெதூரில் பொன்னேரி-பழவேற்காடு செல்லும் 8 அரசு பஸ்களை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்ததை நடத்திய பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் மற்றும் வட்டாட்சியர் மதிவாணன் ஆகியோர் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை சாலை சீரமைப்புக்கு நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. மணல் சாலையாகவே காட்சி அளிக்கிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, மெதூர்-அரசூர் சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. இதனை சீரமைக்க பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் போராட்டம் நடத்தியும் எந்த பயனும் இல்லை. அடுத்த கட்ட போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம். சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News