உள்ளூர் செய்திகள்

மேலூர் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் 2-வது நாளாக போராட்டம்

Published On 2023-03-14 12:30 IST   |   Update On 2023-03-14 12:30:00 IST
  • போராட்டம் முடிந்து எல்லோரும் கலைந்து சென்ற சில மணி நேரங்களிலேயே மீண்டும் அந்த கடை திறக்கப்பட்டது.
  • டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டதால் மேலூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலூர்:

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது சாணிபட்டி. இங்கு அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இக்கடையை அகற்றக்கோரி இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் இது குறித்து கிராம சபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுமக்கள் தொடர் கோரிக்கை வைத்தும் இதுவரை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதை கண்டித்தும், டாஸ்மாக் கடையை உடனே அகற்றக்கோரியும் நேற்று சாணிப்பட்டி மற்றும் கேசம்பட்டி,அருக்கம்பட்டி, கடுமிட்டான்பட்டி ஆகிய பகுதியைச் சேர்ந்த 300க்கு மேற்பட்ட பெண்கள் நேற்று காலை சுமார் 2 மணி நேரம் மேலூர்-நத்தம் செல்லும் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

அப்போது அதிகாரிகள் தரப்பில் 15 தினங்களில் இந்த கடையை அகற்றி விடுவோம் என்று உறுதி கூறினார். அப்போது போராட்டத்தில் பங்கேற்றவர்கள் இன்று முதல் அந்தக் கடையை திறக்க கூடாது என கோரிக்கை வைத்தனர். ஆனால் போராட்டம் முடிந்து எல்லோரும் கலைந்து சென்ற சில மணி நேரங்களிலேயே மீண்டும் அந்த கடை திறக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மீண்டும் இன்று காலை ஒன்று கூடி 2-வது நாளாக பெண்கள் உள்பட ஏராளமானோர் மீண்டும் மறியல் போராட்டம் நடத்தினர். மேலும் டாஸ்மாக் கடை முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த கொட்டாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி பாலாஜி மற்றும் மேலவளவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டதால் மேலூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News