உள்ளூர் செய்திகள்

வைத்திலிங்கம்

வலையில் விழுவாரா வைத்தி...?!

Published On 2023-05-20 09:23 GMT   |   Update On 2023-05-20 09:23 GMT
  • வைத்திலிங்கத்தை பொறுத்தவரை தஞ்சை மண்டலத்தில் குறிப்பாக ஒரத்தநாட்டில் தனி செல்வாக்கு வைத்திருப்பவர்.
  • ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில் பலமான தலைவர்களாக அவர் வைத்திருந்தவர்களில் வைத்தி லிங்கமும் ஒருவராக இருந்தார்.

ஓ.பி.எஸ் அணியின் பலம் வாய்ந்த தலைவர் வைத்திலிங்கம். சட்டப்போராட்டங்களை முன்னெடுத்த போது அ.தி.மு.க.வை கைப்பற்றிவிட முடியும் என்ற நம்பிக்கையோடு ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அணிவகுத்து நின்றார். ஆனால் இப்போது அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமியின் வசம் ஆகிவிட்டது. ஓ.பன்னீர்செல்வம் தொடுத்த அஸ்திரங்கள் அனைத்தும் வீணாகி போனது. அடுத்து என்ன செய்யலாம் என்று முடிவெடுக்க முடியாத நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தவித்துக்கொண்டிருக்கிறார்.

தன் கையை கொஞ்சமாவது பலம் ஆக்கி கொள்ள டி.டி.வி.தினகரனோடு கைகோர்த்து இருக்கிறார். இது எந்த அளவுக்கு எதிர்காலத்தில் பலன் கொடுக்கும் என்பதில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. வைத்திலிங்கத்தை பொறுத்தவரை தஞ்சை மண்டலத்தில் குறிப்பாக ஒரத்தநாட்டில் தனி செல்வாக்கு வைத்திருப்பவர். ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில் பலமான தலைவர்களாக அவர் வைத்திருந்தவர்களில் வைத்தி லிங்கமும் ஒருவராக இருந்தார். குறிப்பாக நால்வர் அணியில் இவரும் இடம் பிடித்து இருந்தார். இப்படி தனக்கென செல்வாக்கை வைத்திருந்தும் அரசியலின் அடுத்த கட்டம் என்ன என்ற கேள்விக்கு விடை தெரியாத நிலையில்தான் இருக்கிறார். ஓ.பன்னீர்செல்வத்துடனும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வுக்கும் அவரால் செல்ல முடியாது. இந்த சூழ்நிலையை சமயோசிதமாக பயன்படுத்திக்கொள்ள தி.மு.க. திட்டமிட்டு வருகிறது. ஏற்கனவே அந்த பகுதியில் தி.மு.க.வுக்கு பலமான தலைவர்கள் இல்லை. பழனிமாணிக்கம் இருந்தாலும் அவரது செயல்பாடு தீவிரமாக இல்லை என்ற கருத்து கட்சிக்குள்ளேயே நிலவுகிறது. இப்போது அந்த பகுதியை கவனித்து வரும் அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி திருச்சியை சேர்ந்தவர். அதேபோல் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும் மன்னார்குடியை சேர்ந்தவர்.

எனவே தஞ்சாவூர், ஒரத்தநாடு பகுதியில் தி.மு.க.வுக்கு வலிமை சேர்க்க வைத்திலிங்கம் கிடைத்தால் நல்லது என்ற எண்ணம் தி.மு.க.வினரிடையே ஏற்பட்டுள்ளது. இதற்காக வைத்தி லிங்கத்துக்கும் வலை விரிக்கப்பட்டுள்ளதாக அந்த பகுதியில் உள்ள உடன்பிறப்புகள் உறுதிபடுத்தினார்கள். நிச்சயம் பாராளுமன்ற தேர்தல் வருவதற்குள் வைத்தி லிங்கம் தி.மு.க.வில் ஐக்கியமாவார் என்று உறுதிபட கூறுகிறார்கள்.

Tags:    

Similar News