ஊத்துக்கோட்டை அரசு பள்ளிக்கு அமெரிக்கா வாழ் தமிழ் சங்கம் உதவி
- பள்ளியில் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவ மாணவிகள் தரையில் அமர்ந்து பாடம் கற்று வருகின்றனர்.
- பள்ளி தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அரசு பள்ளிக்கு அமெரிக்க வாழ் தமிழ் சங்கம் உதவி செய்துள்ளது.
ஊத்துக்கோட்டையில் அரசு ஆஸ்பத்திரி ரோட்டில் அரசு உதவி பெறும் கோதண்டராமன் துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி உள்ளது.1958- ஆம் வருடம் தொடங்கப்பட்ட இந்த பள்ளியில் படித்த மாணவர்கள் பல துறைகளில் சிறந்து விளங்கினர். தற்போதும் விளங்கி வருகின்றனர். பழமை வாய்ந்த இந்த பள்ளியில் தற்போது 1 முதல் 10ம் வகுப்பு வரை 700 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியில் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவ மாணவிகள் தரையில் அமர்ந்து பாடம் கற்று வருகின்றனர். இதைத் தெரிந்து கொண்ட அமெரிக்காவில் தமிழ் பள்ளி நடத்தி வரும் 'அயோவா தமிழ் சங்கம் ' மாணவ- மாணவிகள் மேஜை நாற்காலியில் அமர்ந்து படிக்க உதவி செய்ய முன் வந்தது. அதன்படி ரூ.3 லட்சம் மதிப்புள்ள 70 மேஜை, நாற்காலிகள் பள்ளிக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். தாளாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். அயோவா தமிழ் சங்க நிர்வாகிகள் சிவா, ரவி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மேஜை, நாற்காலிகளை வழங்கினர். எண்ணங்களின் சங்கமம் நிறுவனர் பிரபாகர், நிர்வாகிகள் முருகன், மணிகண்டன் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் நரசிம்மன் நன்றி கூறினார்.