தி.நகரில் ஆமை வேகத்தில் நடக்கும் ஆகாயநடை மேம்பாலபணி- விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
- ஆமை வேகத்தில் நடந்து வரும் தி.நகர் ரெயில் நிலையம் - பஸ் நிலையம் இணைப்பு ஆகாய நடை மேம்பால பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
சென்னை:
சென்னையில் முக்கிய வர்த்தக மையமாக தி.நகர் விளங்குகிறது. மாம்பலம், தி.நகர் ஏரியாவில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், ஜவுளிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் கடைகளுக்கு மாம்பலம் ரெயில் நிலையம் வழியாக தினமும் பல லட்சம் மக்கள் வந்து செல்கின்றனர்.
ரெயில் நிலையம் மற்றும் அருகில் உள்ள ரெங்கநாதன் தெரு, மார்க்கெட் சாலை என அனைத்து சாலைகளிலும் திருவிழா போல மக்கள் கூட்டம் களைகட்டும். புறநகர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் வந்து, மாம்பலம் ரெயில் நிலையத்தில் இறங்கி, தி.நகர் பஸ் நிலைய பகுதிக்கு நெரிசலில் சிக்காமல் செல்வதற்கு வசதியாக மாநகராட்சி சார்பில் புதிய திட்டம் தீட்டப்பட்டது.
இதற்காக மாம்பலம் ரெயில் நிலையம் தி.நகர் பஸ் நிலையம் இடையே ரூ. 30 கோடி செலவில், 14 அடி அகலத்தில், 2,000 அடி தூரத்துக்கு ஆகாய நடை மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இப்பணிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. மேலும் கொரோனா ஊரடங்கால் இப்பணிகள் தடைபட்டது. அதன்பின், 2021 செப்டம்பர் மாதம் இப்பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன.
தி.நகர் ரெயில் நிலையம் பேருந்து நிலையம் இடையே, இரும்பு நடை மேம்பாலம் அமைக்கப்பட்டு, கூரைக்கான இரும்பு கூண்டு பணிகளும் நடந்து வந்தன.
இதில், மாம்பலம் ரெயில் நிலையத்தில் பாலம் இணைப்பு பணியும், தி.நகர் பஸ் நிலையத்திற்கு இறங்கி செல்லும் படிக்கட்டு பணிகள் முடிவடையாமல் உள்ளது.
கூரைக்கான கூண்டு அமைக்கும் பணி, கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது.
தூண்கள் நிறுவப்பட்டன. இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. தீபாவளி, பொங்கல் உட்பட விசேஷ நாட்களில் ரெயில் நிலை பகுதியில் பயணிகள், பொது மக்கள் நெருக்கடி ஏற்படும்.
எனவே, தீபாவளி பண்டிகைக்கு முன், இப்பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு திறந்து விட வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
மாநகராட்சி அதிகாரிகள் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.