உள்ளூர் செய்திகள்

எழில்வேந்தன்

தந்தை இறந்த நிலையிலும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய மாணவன்

Published On 2024-03-29 05:27 GMT   |   Update On 2024-03-29 05:27 GMT
  • அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடந்த ஆங்கில தேர்வை எழில் வேந்தன் எழுத வந்தார்.
  • தேர்வு முடிந்ததும் அவரது தந்தைக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.

மன்னார்குடி:

திருமக்கோட்டை அருகே தந்தை இறந்த துக்கத்திலும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர் எழுதிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே உள்ள தென்பரை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 40). விவசாயி. இவரது மகன் எழில்வேந்தன். இவர் திருமக்கோட்டை உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் ஆறுமுகம் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் இறந்தார்.

அவரது இறுதிச்சடங்கு நடைபெறாத நிலையில் நேற்று 10-ம் வகுப்பு ஆங்கில தேர்வு நடந்தது. தந்தை இறந்த துக்கத்தையும் பொருட்படுத்தாமல், சோகத்தையும் வெளிகாட்ட முடியாமல் தனது படிப்புக்காக தேர்வை எழுத வேண்டும் என்ற நிலையில் திருமக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடந்த ஆங்கில தேர்வை எழில் வேந்தன் எழுத வந்தார்.

அப்போது கோட்டூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், பள்ளியின் தன்னார்வ உடற்கல்வி ஆசிரியர் பூபேஷ் ஆகியோர் மாணவருக்கு ஆறுதல் கூறி தகுந்த ஆலோசனை வழங்கி தேர்வு அறைக்கு அழைத்து வந்தனர். பின்னர் மாணவர் தேர்வு எழுதினார்.

தனது தந்தை உயிரிழந்து, அவரது உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது விருப்பபடி தனது கல்விக்கு எந்த தடையும் வரக்கூடாது என்ற எண்ணத்தில் நேற்றைய தேர்வில் எழில்வேந்தன் பங்கேற்றது அனைவர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தேர்வு முடிந்ததும் அவரது தந்தைக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது. இதில் எழில்வேந்தனின் பள்ளி நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களும் பங்கேற்றனர்.

Tags:    

Similar News