உள்ளூர் செய்திகள்

பள்ளி வேன் மோதி சிறுவன் பலியான சம்பவம்- பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2024-01-19 05:46 GMT   |   Update On 2024-01-19 05:47 GMT
  • விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வேன் டிரைவர் மணி என்பவரை கைது செய்தனர்.
  • பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள்- உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பாச்சங்காட்டுபாளையத்தை சேர்ந்தவர் ராமர். இவருடைய மகன் சாய் சரண் (வயது 6). இவன் பல்லடம் அருகே பெத்தாம்பாளையத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்தான். தினமும் பள்ளிக்கு சொந்தமான வேனில் மாணவன் பள்ளிக்கு சென்று வந்தான்.

வழக்கம் போல் நேற்று காலை பள்ளி வேனில் மாணவன் சாய் சரண் பள்ளிக்கு சென்றான். பின்னர் மாலையில் வகுப்புகள் முடிந்ததும் பள்ளி வேனில் வீட்டிற்கு சென்றான். வேன் மாணவன் வீட்டிற்கு அருகே வந்ததும் நிறுத்தப்பட்டது. அப்போது வேனில் இருந்து சாய் சரண் இறக்கிவிடப்பட்டான். மற்ற குழந்தைகளும் அங்கு இறக்கி விடப்பட்டனர்.

பின்னர் பள்ளி வேன் திரும்பியதாக கூறப்படுகிறது. அப்போது வேனின் பின் சக்கரத்தில் சாய்சரண் சிக்கிக் கொண்டதாக தெரிகிறது. இந்த விபத்தில் மாணவன் சாய் சரண் படுகாயம் அடைந்தான். உடனே சாய்சரணின் பெற்றோர் மற்றும் அருகில் உள்ளவர்கள் மாணவனை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சாய் சரணை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடம் சென்ற பல்லடம் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டபனர். பள்ளிக்கு சென்ற மாணவன் பள்ளி வேனிலேயே சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில் விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வேன் டிரைவர் மணி என்பவரை கைது செய்தனர். இதனிடையே இந்த விபத்து சம்பவத்தில் அஜாக்கிரதையாக செயல்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்லடம் அருகே உள்ள கள்ளிமேடு பகுதியில் திருப்பூர் -பொங்கலூர் ரோட்டில் இன்று காலை பொதுமக்கள்- உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடம் சென்ற போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News