உள்ளூர் செய்திகள்

ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.

ஆரோக்கியம் தரும் பனங்கள்ளை டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும்- ரூபி மனோகரன் வேண்டுகோள்

Published On 2023-05-18 10:16 GMT   |   Update On 2023-05-18 10:16 GMT
  • பனங்கள்ளை, நம் முன்னோர் பனம்பால் என்றும் சொல்லிவைத்து இருக்கிறார்கள்.
  • பனை மரத்தில் இருந்து, சுண்ணாம்பு உள்ளிட்ட எதுவும் சேர்க்காமல் 100 சதவீதம் இயற்கையாகக் கிடைப்பதுதான் பனங்கள்.

சென்னை:

தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் சில தினங்களுக்கு முன்பு மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இந்த நிலை உடனடியாக மாற்றப்பட வேண்டும். அதற்கு ஒரே தீர்வு, பனங்கள் இறக்கவும், அதை விற்பனை செய்யவும் அனுமதிப்பது தான். அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திராவில் கள் இறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அது போல தமிழகத்திலும் கள் இறக்க அரசு அனுமதி வழங்க வேண்டும்.

பனங்கள்ளை, நம் முன்னோர் பனம்பால் என்றும் சொல்லிவைத்து இருக்கிறார்கள். பனை மரத்தில் இருந்து, சுண்ணாம்பு உள்ளிட்ட எதுவும் சேர்க்காமல் 100 சதவீதம் இயற்கையாகக் கிடைப்பதுதான் இந்த பனங்கள்.

இதைக் குடித்தால் சிறிது நேரத்துக்குத்தான் போதை இருக்கும். இந்த பனங்கள் அருந்தும் பழக்கம், நம் தமிழர் வாழ்வில் இணைந்திருந்த ஒன்றுதான். இப்போது டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மது வகைகள், உடலுக்கு தீங்கை மட்டுமே ஏற்படுத்தும். ஆனால், பனங்கள் அப்படி கிடையாது. விலை மலிவாகக் கிடைக்கும் அந்த பனங்கள்ளை ஒரு ஏழை தொழிலாளி குடிப்பதால், அவருக்கு உடல் பாதிப்பு எதுவும் ஏற்படாது. ஆரோக்கியமாக இருப்பார். கள்ளுக்கான செலவும் குறைவாகவே இருக்கும்.

ஒரு பனை தொழிலாளி பனங்கள் இறக்கி விற்பனை செய்யும்போது, அந்த பனை மரங்கள் வைத்துள்ள அனைவருக்கும் புதிய தொழில் வாய்ப்பு கிடைக்கும். கிராமப்புறங்களில் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும்.

பனை மரங்களை வளர்க்கும் ஆர்வமும் பெருகும். அதனால், நம் தமிழ்நாட்டின் மரமான பனை மரத்தின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்.

ஆக, பனங்கள் இறக்க வழங்கப்படும் அனுமதியால், கிராமப்புறங்களில் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி உண்டாகும். டாஸ்மாக் மதுவைக் குடித்து, உடல் பாதிப்புக்கு உள்ளாகி, மருத்துவமனைகளுக்குச் செல்லும் குடி நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்து விடும். விலை மலிவான பனங்கள் பயன்பாட்டில் இருந்தால், கள்ளச்சாராயம் யாருக்கும் தேவைப்படாது. பனம்பால் என்கிற இந்த பனங்கள் டாஸ்மாக் கடைகளிலேயே விற்பனை செய்ய அரசாங்கமும் முன் வரவேண்டும். இதை நான் சட்டமன்றத்திலும் ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறேன். நமது முதல்வர் அவர்கள், பனங்கள் இறக்க அனுமதி தந்து, அந்த பனங்கள்ளை டாஸ்மாக் கடைகளிலும் விற்பனைக்குக் கொண்டு வரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News