உள்ளூர் செய்திகள்

சென்னை தனியார் பள்ளி பெண் நிர்வாகியிடம் ரூ.30 லட்சம் மோசடி- திருச்சியை சேர்ந்த 2 பேர் மீது வழக்கு

Published On 2023-02-15 14:21 IST   |   Update On 2023-02-15 14:21:00 IST
  • பள்ளியை மீட்க ரூ.15 கோடி கடன் கேட்டு திருச்சியில் உள்ள ஒருவரை நாடி உள்ளார்.
  • புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சியாமளாதேவி பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றி மோசடி செய்த 2 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

திருச்சி:

சென்னை பாடி எம்.டி.எச். ரோடு பகுதியைச் சேர்ந்தவர் உமா பச்சையப்பன். இவர் சென்னையில் தனியார் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.

கொரோனா காலத்தில் வகுப்புகள் நடைபெறாமல் போனது. இதனால் கட்டணம் வசூலிக்க முடியவில்லை. எனவே பள்ளிக்காக வங்கியில் வாங்கிய கடனை அவரால் திருப்பி செலுத்த இயலவில்லை.

அதைத் தொடர்ந்து வங்கி நிர்வாகம் பள்ளிக்கு சீல் வைத்தது. இந்நிலையில் பள்ளியை மீட்க ரூ.15 கோடி கடன் கேட்டு திருச்சியில் உள்ள ஒருவரை நாடி உள்ளார். அவர் கேட்டுக்கொண்டதன் பேரில் உமா பச்சையப்பன் சென்னையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டு வந்துள்ளார்.

பின்னர் கடன் பெற்று தருவதாக உறுதி அளித்த நபரை சந்தித்தார். அப்போது அவர் ரூ.30 மதிப்பிலான ஸ்டாம்ப் மற்றும் பாண்டு பத்திரங்களை வாங்கி வரும்படி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இன்னொரு நபரை அறிமுகம் செய்தார். அதன்படி உமா அந்த நபரிடம் ரூ.30 லட்சம் பணத்தை கொடுத்தார். ஆனால் அவர் ஸ்டாம்ப் பேப்பர் எதுவும் கொடுக்கவில்லை.

இதையடுத்து அந்த 2 பேரும் கூட்டு சேர்ந்து உமா பச்சையப்பனை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. பின்னர் பாதிக்கப்பட்ட உமாபச்சையப்பன் திருச்சி செசன்ஸ் கோர்ட்டு குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சியாமளாதேவி பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றி மோசடி செய்த 2 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News