உள்ளூர் செய்திகள்

இல்லம் தேடி கல்வி திட்டம் தோல்வி- ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

Published On 2022-12-15 08:11 GMT   |   Update On 2022-12-15 08:11 GMT
  • தமிழகத்தில் 20 சதவீத மாணவர்களால் மட்டுமே தமிழ் சொற்களை புரிந்து கொள்ள முடிகிறது.
  • அடிப்படை கணக்குகளை 23 சதவீதம் பேர்களால் தான் செய்ய முடிகிறது.

மதுரை:

மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

இல்லம் தேடி கல்வி திட்டங்கள் இன்றைக்கு தமிழகத்தில் மிகப்பெரிய தோல்வியை தழுவி இருக்கிறது. பெரிய அளவில் பலன் தரவில்லை என்று என்.சி.இ.ஆர்.டி. நடத்திய ஆய்வின் மூலமாக தெரிய வந்துள்ளது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. அடிப்படை கல்வியை வலுப்படுத்தி மாற்று திட்டங்கள் செயல்படுத்த வேண்டுமென கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றார்கள்.

தமிழகத்தில் 20 சதவீத மாணவர்களால் மட்டுமே தமிழ் சொற்களை புரிந்து கொள்ள முடிகிறது. அடிப்படை கணக்குகளை 23 சதவீதம் பேர்களால் தான் செய்ய முடிகிறது. 52 சதவீத மாணவர்களால் நாள்காட்டியில் தேதி, மாதத்தை கூட சரியாக சொல்ல முடியாத ஒரு அவல நிலை உள்ளது.

அதிலும் அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் மிகவும் பின்தங்கி உள்ளது. அதே நேரம் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் 40-ல் இருந்து 45 சதவீதம் வரை மாணவர்கள் தாய் மொழியை நன்கு படிக்கவும், அடிப்படை கணக்குகளுக்கு பதில் அளிக்கவும் முடிகிறது. இதன் மூலம் தமிழகத்திலே கல்வி கற்றலில் பின்தங்கி இருப்பது வேதனையின் வேதனையாகும்.

கொரோனா தாக்கம் இருப்பதாக நாம் வைத்துக் கொண்டாலும் கூட, இந்த 2 ஆண்டுகளாக இன்னும் பள்ளிக்கு முழுமையாக மாணவர்களை வரவழைத்து, அவர்களுக்கு கல்வி பயில்வதற்கு இந்த அரசு எடுத்த நடவடிக்கைகள் எல்லாம், தோல்வியிலே முடிந்திருப்பதே ஆய்வின் மூலம் தெரிகிறது.

ஆகவே பிரிட்ஜ் கோர்ஸ் என்ற இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் ஆகிய திட்டங்கள் தமிழக அரசால் ரூ.500 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு முடிந்துவிட்டது. எனினும் தமிழக மாணவர்களின் அடிப்படை கற்றல் பின்தங்கி இருப்பது வேதனையின் உச்சமாக உள்ளது. தி.மு.க. அரசால் செயல்படுத்தப்பட்ட திட்டம் தோல்வி அடைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News