பொன்னேரியில் அதிகாரிகள் வராததால் கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள்
- பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்.
- அதிகாரி ஒருவர் அவர்களை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.
பொன்னேரி:
பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் காலை 10 மணிக்கு நடை பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் முன்கூட்டியே விவசாயிகள் அங்கு கூடினர். 12 மணி ஆகியும் அதிகாரிகள் ஒருவர் கூட கூட்டத்திற்கு வராததால் விரத்தி அடைந்த விவசாயிகள் கூட்ட அரங்கை விட்டு ஆத்திரத்துடன் வெளியேறி அலுவலக நுழைவு வாயில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த அதிகாரி ஒருவர் அவர்களை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். அந்த அதிகாரியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் சம்பந்தப்பட்ட அதிகாரி திணறினார்.
பின்னர் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் ஒருவர் கூட கலந்து கொள்ளாத நிலையில் வேளாண், பொதுப்பணி, மின்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் அதிகாரிகள் மட்டும் பங்கேற்று கூட்டத்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.