உள்ளூர் செய்திகள்

கடலோர பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவலா?- மீனவர் பகுதியில் போலீசார் ஒத்திகையால் பரபரப்பு

Published On 2022-06-28 15:45 IST   |   Update On 2022-06-28 15:45:00 IST
  • தமிழக கடலோர பகுதிகளான திருவள்ளூர் மாவட்டம் துவங்கி கன்னியாகுமரி மாவட்டம் வரை இந்த ஒத்திகை நடைபெறுகிறது.
  • செங்கல்பட்டு மாவட்டத்தில் கடலோர காவல்படை, போலீசார் என 150க்கும் மேற்பட்டோர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் ஒத்தவாடை தெரு கடலோரப் பகுதி மீனவர்களிடம் இன்று காலை கடலோர காவல் படையினர் மற்றும் போலீசார் திடீரென விசாரித்து அவர்களிடம் துப்பாக்கி, வெடிகுண்டு இருக்கிறதா என சோதனை செய்து, பயங்கரவாதிகள் போன்று எவரேனும் புதிய நபர்களை இன்று காலை. பார்த்தீர்களா என விசாரித்தனர். இதனால் அங்கு பரபரப்பானது. பின்னர் இது கடலோர காவல் படையின் "சாகர் ஹவாஸ்-2022" ஒத்திகை என தெரியவந்தது.

தமிழக கடலோர பகுதிகளான திருவள்ளூர் மாவட்டம் துவங்கி கன்னியாகுமரி மாவட்டம் வரை இந்த ஒத்திகை நடைபெறுகிறது. மத்திய கடலோர காவல் படை வீரர்கள் சென்னை துறைமுகம் பகுதியில் இருந்து மீனவர்கள், பயணிகள் போன்ற மாறுவேடத்தில் டம்மி துப்பாக்கி, வெடிகுண்டு, வாக்கி டாக்கியுடன் பயங்கரவாதி போல் கடல்வழி மற்றும் தரைவழியாக ஊடுருவி உள்ளனர்.

இவர்கள் அணுமின் நிலையம், அனல்மின் நிலையம் இருக்கும் கடலோர கூடுதல் பாதுகாப்புடைய பகுதிக்குள் நுழைவார்கள். இவர்களை எப்படி தமிழக கடலோர காவல் படையினரும், போலீசாரும் அடையாளம் கண்டு பிடிக்கிறார்கள் என்பதுதான் இந்த ஒத்திகை.

இன்று காலை 6 மணிக்கு கோவளம், நெம்மேலி, தேவநேரி, மாமல்லபுரம், வெண்புருஷம், கொக்கிலமேடு, சட்ராஸ், கல்பாக்கம், புதுப்பட்டினம், உய்யாலிகுப்பம், கூவத்தூர், கடலூர் பகுதியில் துவங்கிய இந்த ஒத்திகை நாளை மாலை 6 மணி வரை, இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கடலோர காவல்படை, போலீசார் என 150க்கும் மேற்பட்டோர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News