பா.ஜனதா பிரமுகரின் மகன் மரணத்தில் மர்மம் நீடிப்பு- கொலையா? என போலீசார் தீவிர விசாரணை
- கடந்த 16-ந்தேதி வீட்டுக்கு வந்த சரவணபாரதி மதியம் வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றதாக தெரிகிறது.
- சரவணபாரதி எப்படி இறந்தார்? முன்விரோதம் காரணமாக யாராவது அவரை கொலை செய்து கிணற்றில் வீசினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாடிப்பட்டி:
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நீரேத்தான் புது கண்மாய் பகுதியில் உள்ள கிணற்றில் 21 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் முகிலனுக்கு தகவல் கொடுத்தனர்.
அவர் கொடுத்த புகாரின்பேரில் வாடிப்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடம் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கிணற்றில் பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் பிணமாக கிடந்தவர் வாடிப்பட்டி அருகே உள்ள தாதம்பட்டி திருமால்தேவர் தெருவை சேர்ந்த பா.ஜனதா மாவட்ட செயற்குழு உறுப்பினர் சசிகுமாரின் மகன் சரவண பாரதி (வயது 21) என தெரியவந்தது.
இவர் சோழவந்தான் பகுதியில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். விடுதியில் தங்கி இருந்த சரவணபாரதி ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டுக்கு வருவது வழக்கம்.
அதன்படி கடந்த 16-ந்தேதி வீட்டுக்கு வந்த சரவணபாரதி மதியம் வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றதாக தெரிகிறது. அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை. பெற்றோரும் கல்லூரி விடுதிக்கு சென்றிருக்கலாம் என தேடாமல் இருந்தனர். இந்த நிலையில் விடுதிக்கும் சரவணபாரதி வராதது தெரியவந்த நிலையில் அவர் கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
சரவணபாரதி எப்படி இறந்தார்? முன்விரோதம் காரணமாக யாராவது அவரை கொலை செய்து கிணற்றில் வீசினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சரவணபாரதி சாவில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது.