உள்ளூர் செய்திகள்

பிரதமர் மோடி 27-ந்தேதி மதுரை வருகை- சிறு, குறு தொழில்முனைவோர் கருத்தரங்கில் பங்கேற்கிறார்

Published On 2024-02-22 11:03 GMT   |   Update On 2024-02-22 11:03 GMT
  • மதுரை நகரில் மோடி பயணம் செய்யும் சாலைகள் மற்றும் முக்கிய பகுதிகளிலும் கண்காணிப்பு பணிகளை மாநில போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.
  • மோடி வருகையையொட்டி மத்திய பாதுகாப்பு படையினரும் ஓரிரு நாளில் மதுரை வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய உள்ளனர்.

மதுரை:

தமிழ்நாட்டில் வருகிற 27 மற்றும் 28-ந்தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் செய்கிறார். கோவை, திருப்பூர், மதுரை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக டெல்லியில் இருந்து 27-ந்தேதி மதியம் திருவனந்தபுரம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் வரும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

பின்னர் மாலை ஐந்து மணிக்கு பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் மதுரை வருகிறார். மதுரை வீர பாஞ்சான் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறங்கும் பிரதமர் மோடி அந்த பள்ளி வளாகத்தில் நடைபெறும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்க திட்டம், கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசுகிறார்.

மாலை 6.15 மணி அளவில் காரில் புறப்பட்டு பசுமலையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு வரும் மோடி அங்கு இரவு தங்குகிறார். முன்னதாக பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பா.ஜனதா தலைவர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த மோடி திட்டமிட்டுள்ளார். கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மறுநாள் 28-ந்தேதி காலை 8 .40 மணிக்கு காரில் மதுரை விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி செல்கிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழா நடைபெறும் தனியார் பள்ளி மைதானம் மற்றும் இரவு தங்கி ஓய்வு எடுக்கும் பசுமலை நட்சத்திர ஓட்டல் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மதுரை நகரில் மோடி பயணம் செய்யும் சாலைகள் மற்றும் முக்கிய பகுதிகளிலும் கண்காணிப்பு பணிகளை மாநில போலீசார் முடுக்கி விட்டுள்ளனர். மோடி வருகையையொட்டி மத்திய பாதுகாப்பு படையினரும் ஓரிரு நாளில் மதுரை வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய உள்ளனர்.

Tags:    

Similar News