மீஞ்சூர்-பொன்னேரி பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதி
- பல இடங்களில் பழுதான மின்கம்பிகள் உள்ளதால் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது.
- சீரான மின்சாரம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு, மெதூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொது மக்கள் மிகவும் அவதி அடைந்து வருகிறார்கள்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, பொன்னேரி, தடப்பெரும்பாக்கம், சின்னக்காவனம், மெதூர், மீஞ்சூர், அரியன் வாயல், அனுப்பம்பட்டு, பழவேற்காடு, தாங்கல் பெரும்புலம், ஆண்டார் மடம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான காற்று மற்றும் மழை பெய்ய தொடங்கிய உடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விடுகிறது.
பல இடங்களில் பழுதான மின்கம்பிகள் உள்ளதால் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதனால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சீரான மின்சாரம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.
இதுகுறித்து மின்சார துறை ஊழியர் ஒருவரிடம் கேட்டபோது, பொன்னேரி, மீஞ்சூர் பகுதியில் பல இடங்களில் மின்கம்பங்கள் சேதம் ஆகியும் 30 ஆண்டுகளுக்கு மேலாக மின்வயர்கள் மிகவும் பழையதாகவும் உள்ளது.
இதனால் லேசான காற்றில் அறுந்து விழுந்து விடுகிறது. இதேபோல் துணை மின் நிலையங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மரில் மின்சாதன பொருட்கள் பழையது என்பதால் அடிக்கடி பழுது ஏற்பட்டு மின்சாரம் தடைபடுகிறது. இதனை மாற்றும் பணி நடந்து வருகிறது என்றார்.