உள்ளூர் செய்திகள்

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Published On 2023-01-17 02:49 GMT   |   Update On 2023-01-17 02:49 GMT
  • காளைகளை துணிந்து நின்று அவற்றை அடக்கும் மாடுபிடி வீரர்கள் வீரம் அசாத்தியமானது.
  • இந்த போட்டியில் 1,000 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

மதுரை:

பொங்கல் பண்டிகை என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள்தான். வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்து வரும் காளைகளை கொஞ்சமும் அச்சம் கொள்ளாமல் துணிந்து நின்று அவற்றை அடக்கும் மாடுபிடி வீரர்கள் வீரம் அசாத்தியமானது. தமிழர்களுடைய வீரத்தையும், கலாச்சாரத்தை பறைசாற்றும் இந்த ஜல்லிகட்டுப் போட்டிகளை காண உள்ளூர் பார்வையாளர்கள் முதல் உலகம் முழுவதும் இருந்து திரள்வார்கள்.

பொங்கல் விழாவை முன்னிட்டு நடத்தப்படும் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்தப் போட்டியில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் தங்க காசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிறந்த வீரருக்கு முதலமைச்சர் சார்பில் காரும், சிறந்த காளைக்கு அமைச்சர்உதயநிதி ஸ்டாலின் சார்பில் காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

இந்த போட்டியில் 1,000 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 7 மருத்துவ குழுக்கள் 20 மருத்துவர்கள் உட்பட 80 பேர் மாடுகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினர். 20 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் முன்னிலையில் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

ஜல்லிக்கட்டு போட்டிக்காக 2 எஸ்.பிக்கள், 8 ஏ.டி.எஸ்.பிக்கள், 29 டி.எஸ்.பிக்கள், 60 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 2000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அமைச்சர்கள் அன்பில் மகேஷ், பழனிவேல் தியாகராஜன், நடிகர் சூரியும் இந்த போட்டியை கண்டுகளித்து வருகின்றனர்.

Tags:    

Similar News