மன்னார்குடி அருகே வளரும் தமிழகம் கட்சி நிர்வாகி கொலை வழக்கில் 5 பேர் கைது
- குற்றவாளியான ராஜ்குமார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
- போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 34).
வளரும் தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக இருந்தார். இவர் மீது பல்வேறு கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக ராஜ்குமார் தனது வழக்கறிஞர் உள்ளிட்ட 5 பேருடன் நேற்று வந்தார்.அதனைத் தொடர்ந்து வழக்கறிஞரை கொரடாச்சேரி அருகில் உள்ள கமலாபுரத்தில் விடுவதற்காக காரில் 5 பேருடன் சென்றார்.
அப்போது மன்னார்குடியில் இருந்து திருவாரூர் நோக்கி அதிவேகத்தில் வந்த கார் இவர்கள் வந்த கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த காரில் இருந்து இறங்கிய மர்ம கும்பல் ராஜ்குமாரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி கொலை செய்து தப்பி ஓடினர்.
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை ஆகியோர் உத்தரவின்பேரில் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஒரு இடத்தில் பதுங்கியிருந்த நீடாமங்கலத்தை சேர்ந்த நடேச தமிழர்வனின் மகன் ஸ்டாலின் பாரதி (வயது 32) , அரசு (20), மாதவன் (21), வீரபாண்டியன் (29), பாண்டியன் (23) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
முதல் கட்ட விசாரணையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நீடாமங்கலம் கடைத் தெருவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வன் என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இதில் முக்கிய குற்றவாளியான ராஜ்குமார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். எனவே நடேசன் தமிழார்வனின் கொலைக்கு பழி தீர்க்கும் வகையில் அவரது மகன் ஸ்டாலின்பாரதி சிலருடன சேர்ந்து ராஜ்குமாரை கொலை செய்தது தெரியவந்தது.
இருப்பினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா ? எனவும் விசாரித்து வருகின்றனர்.