உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் மாம்பழம் விலை கிடுகிடு உயர்வு

Published On 2023-04-16 05:47 GMT   |   Update On 2023-04-16 05:47 GMT
  • செந்தூரம், கிளி மூக்கு போன்ற ரக மாம்பழங்கள் கடந்த ஆண்டு விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது.
  • பெங்களுரா, மல்கோவா, இமாம் சந்த், குண்டு நடுச்சாலை போன்ற ரக மாம்பழங்களும் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளன.

ஈரோடு:

கோடை காலத்தில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் கனிகளில் முதலிடத்தில் இருப்பது மாம்பழம் தான். ஈரோடு மாவட்டத்தில் மாம்பழங்கள் குறைந்த அளவிலேயே விளைவிக்கப்படுகிறது. இதனால் ஈரோடு மாவட்டத்திற்கு அருகே உள்ள சேலம், கிருஷ்ணகிரி, சங்ககிரி, மேச்சேரி, ஆத்தூர், வனவாசி, நங்கவள்ளி, தலைவாசல் போன்ற பகுதியில் இருந்து மாம்பழங்கள் அதிக அளவில் விளைச்சலாகி வருகிறது.

ஈரோட்டில் ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்தே வ.உ.சி. நேதாஜி காய்கறி மார்க்கெட், சம்பத் நகர், பெரியார் நகர் உழவர் சந்தைகள் உட்பட அனைத்து கடைகளிலும் பல்வேறு வகை மாம்பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. குறிப்பாக பங்கனப்பள்ளி, செந்தூரம், மல்கோவா, கிளி மூக்கு போன்ற வகை மாம்பழங்கள் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளன. வ.உ.சி. மார்க்கெட்டிற்கு இன்று 10 டன் மாம்பழம் விற்பனைக்கு வந்துள்ளது.

சேலம், கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் அதிகம் விளைச்சல் ஆகும். செந்தூரம், கிளி மூக்கு போன்ற ரக மாம்பழங்கள் கடந்த ஆண்டு விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.35-க்கு விற்கப்பட்ட செந்தூரம் இந்த ஆண்டு ரூ.80 முதல் ரூ. 110 வரை விற்கப்படுகிறது. இதேபோல் ரூ.30-க்கு விற்கப்பட்ட கிளி மூக்கு மாம்பழம் இந்த ஆண்டு ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் மாம்பழம் வரத்து குறைந்து இருப்பது தான்.

இதேபோல் பெங்களுரா, மல்கோவா, இமாம் சந்த், குண்டு நடுச்சாலை போன்ற ரக மாம்பழங்களும் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளன. இவற்றின் விலையும் கடந்த ஆண்டை விட 2 மடங்கு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மாம்பழம் மொத்த வியாபாரிகள் கூறியதாவது:-

ஈரோட்டிற்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற பகுதியில் இருந்து அதிக அளவில் மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. தற்போது மாம்பழம் சீசன் தொடங்கி விட்டாலும் வரத்து மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால் மாம்பழங்கள் விலை அதிகரித்துள்ளது.

ஓசூர், பெங்களூர், ஆந்திரா, கர்நாடகா போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு வகை மாம்பழங்கள் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளன. இந்த மாம்பழங்கள் வரத்து அதிகரித்தால் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

ஈரோட்டில் கடந்த சில மாதங்களாகவே கடும் வெயில் வாட்டி வருவதால் மா மரத்தில் காய் பிடிக்கும் சீசனில் பூக்களிலேயே உதிர்ந்து விடுகிறது. மேலும் மாங்காய் முழு வளர்ச்சி பிடிக்காமல் வெம்பி விழுந்து விடுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் தான் தற்போது சீசன் தொடங்கியும் மாம்பழம் வரத்து குறைவாக உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News