ஆண்டிபட்டி அருகே மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது
- 16 வயதுடைய பிளஸ்-1 மாணவியை முருகன் தனது வீட்டுக்கு வருமாறு அழைத்து செஸ்போர்டு தருவதாக கூறியுள்ளார்.
- இன்ஸ்பெக்டர் சரவணன் போக்சோ சட்டத்தின் கீழ் முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தங்கம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 40). இவரது மனைவி தனியார் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அந்த நிறுவனத்தின் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தேவையான கேரம், செஸ் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் வீட்டில் வைத்திருந்தனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பிளஸ்-1 மாணவியை முருகன் தனது வீட்டுக்கு வருமாறு அழைத்து செஸ்போர்டு தருவதாக கூறியுள்ளார். பின்னர் மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அலறியடித்து வீட்டை விட்டு வெளியேறினார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கேட்ட போது, முருகன் தன்னை பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறினார். இதனையடுத்து கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் போக்சோ சட்டத்தின் கீழ் முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.