வடமாநில கூலிப்படை மூலம் மாடுகளை திருடி விற்ற கும்பல்- 5 பேர் கைது
- கூடல்புதூர் போலீஸ் நிலையத்தில் மர்ம கும்பல் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
- மாடு திருட்டு கும்பலின் பின்னணியில் இன்னும் பலர் இருக்கலாம் என்று தெரிகிறது.
மதுரை:
மதுரை செல்லூர், கூடல்நகர், விளாங்குடி, கரிசல்குளம், தெற்குவாசல், அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் பசுமாடுகளை நள்ளிரவு நேரத்தில் மர்ம கும்பல் திருடி செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தது.
இதில் ஈடுபடும் நபர்கள் யார்? என்பது மர்மமாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி இரவு எஸ்.எஸ்.காலனி, தாமஸ் காலனி பகுதியில் சரக்கு வேனில் வந்த ஒரு கும்பல் மாடுகளை திருடி செல்வதை அந்த பகுதியை சேர்ந்த சிலர் பார்த்து விட்டனர். அவர்கள் பிடிக்க முயன்றதும் மர்ம நபர்கள் தப்பி சென்றனர்.
அவர்களை சிலர் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்றனர். மேலும் இதுகுறித்து விளாங்குடி சோதனை சாவடியில் இருந்த போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் உஷார் நிலையில் இருந்தனர். இதற்கிடையே மாடுகளை திருடி கடத்தி வந்த சரக்கு வேன் அந்த வழியாக வந்தது.
அந்த வாகனம் செல்லாமல் இருப்பதற்காக இரும்பு தடுப்பை வைத்தனர். ஆனால் வேகமாக வந்த வேன் இரும்பு தடுப்பை தள்ளிகொண்டு சென்றது. இதில் மர்ம கும்பலை பிடிக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் தவமணி என்பவர் காலில் இரும்பு தடுப்பு விழுந்து படுகாயம் ஏற்பட்டது. அவரை மர்ம நபர்கள் வேனை ஏற்றி கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
இந்த மாடு திருட்டு கும்பலை பிடிக்க செல்லூர் போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் கூடல்புதூர் போலீஸ் நிலையத்தில் மர்ம கும்பல் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
சரக்கு வேன் வந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்து பார்த்தனர். அதில் சரக்கு வாகனத்தின் பதிவு எண் தெரியவந்தது. அதனடிப்படையில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.
நேற்று தனிப்படை போலீசார் கோசாக்குளம், குலமங்கலம் மெயின் ரோடு அய்யனார் கோவில் அருகில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மாடுபிடி கும்பல் பயன்படுத்திய சரக்கு வாகனம் அந்த வழியாக வந்தது. அதனை போலீசார் மடக்கி பிடிக்க முயன்றனர்.
இதைத் தொடர்ந்து அதில் வந்த 8 பேர் கீழே இறங்கி தப்பி ஓடினர். இதில் 5 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் அரியானா மாநிலம் மேவாட் ரசூல்பூரை சேர்ந்த சாகுல் (வயது23), சுபைர் (33), நாசர் (22), இர்பான் (26), முதின் (42) என்பதும், இவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சரக்கு வேனில் மாடுகளை திருடிகடத்தி சென்றதும் தெரியவந்தது.
இவர்கள் மதுரையில் 20-க்கும் மேற்பட்ட மாடுகளை திருடி சென்றுள்ளனர். இவர்களுக்கு திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த ஒருவர் மூளையாக செயல்பட்டுள்ளார். அவர் ஒவ்வொரு ஊரிலும் ஆட்களை வைத்து மாடுகளை நள்ளிரவு நேரத்தில் திருடிவர செய்துள்ளார்.
இதற்காக ஒரு நபருக்கு தினமும் ரூ.1500 கூலி கொடுத்துள்ளார். அந்த மாடுகளை அவர் தலா ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனை செய்து வந்துள்ளார். இந்த மாடு கடத்தி விற்பனை செய்யும் கும்பலில் தப்பி சென்ற மேலும் 5 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் இந்த திருட்டில் மூளையாக செயல்பட்ட தாராபுரத்தை சேர்ந்தவரை பிடிக்கவும் தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். மாடு திருட்டு கும்பலின் பின்னணியில் இன்னும் பலர் இருக்கலாம் என்று தெரிகிறது. அவர்களையும் கைது செய்ய தனி்படை போலீசார் வலைவிரித்துள்ளனர்.