உள்ளூர் செய்திகள்

லாரி டயரில் சிக்கியதில் தேவானந்தின் கை நசுங்கி உள்ளதை படத்தில் காணலாம்.

திருப்பூரில் லாரி மோதி கல்லூரி மாணவர் பலி

Published On 2023-07-18 06:47 GMT   |   Update On 2023-07-18 06:47 GMT
  • நிலை தடுமாறி கீழே விழுந்த தேவானந்த் லாரியின் பின்பக்க டயரில் சிக்கினார்.
  • விபத்து குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்:

திருப்பூர் மங்கலம் ரோடு சின்னாயி லே அவுட் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரது மகன் தேவானந்த் (வயது 20). சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தினமும் காலை உடல் பயிற்சி செய்வது வழக்கம்.

இன்று காலை வழக்கம் போல் உடற்பயிற்சி செய்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். குமரன் ரோடு எம்ஜிஆர்., சிலை அருகே செல்லும் போது, குமரன் ரோட்டை கடந்து பார்க் ரோடு வழியாக செல்ல முயன்றார். அப்போது குமரன் ரோட்டில் இருந்து பழைய பஸ் நிலையம் நோக்கி வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த தேவானந்த் லாரியின் பின்பக்க டயரில் சிக்கினார். இதில் அவரது வலது கை டயரில் சிக்கி சிதைந்தது.

வலியால் துடித்துக் கொண்டிருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். ஆனால் திடீரென தேவானந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் சதீஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News