உள்ளூர் செய்திகள்

சட்ட சிக்கல்களை கருத்தில்கொண்டு வழக்கு விசாரணை தமிழகத்திற்கு மாற்றம்?- சட்ட நிபுணர்களுடன் கேரள போலீசார் ஆலோசனை

Published On 2022-11-07 04:49 GMT   |   Update On 2022-11-07 04:49 GMT
  • குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி, குற்றம் நடந்த இடத்தில் தான் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
  • வழக்கில் குற்றம் நடந்த இடம் கிரீஷ்மா வீடு தான். எனவே தமிழக போலீசார் (பளுகல் போலீசார்) தான் வழக்கின் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று சட்ட நிபுணர்கள் சொல்கின்றனர்.

மாணவர் ஷாரோன் ராஜ் கொலை வழக்கில் கேரள குற்றப்பிரிவு போலீசார் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் இந்த வழக்கை தமிழக போலீசார் விசாரிக்க வேண்டுமா? கேரள போலீசார் தான் விசாரிக்க வேண்டுமா? என்பதில் ஆரம்பத்தில் இருந்தே ஓரு குழப்பம் இருந்து வருகிறது.

இதற்கு காரணம் கிரீஷ்மா வீடு இருப்பது, குமரி மாவட்டம் பளுகல் போலீஸ் சரகத்தில். ஆனால் ஷாரோன்ராஜ் இறந்தது கேரள மாநிலம் பாறசாலை ஆஸ்பத்திரியில். அவரது பெற்றோர் தமிழக போலீசார் விசாரிப்பதை விரும்பவில்லை. அவர்கள் புகார் கொடுத்ததும் பாறசாலை போலீஸ் நிலையத்தில் தான்.

அதன் அடிப்படையிலேயே கேரள போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்களுடன் தமிழக போலீசாரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். தற்போது வரை இந்த வழக்கு கேரள போலீசார் வசமே உள்ளது. ஆனால் தொடர்ந்து வழக்கை நடத்துவதில் சிக்கல் ஏற்படலாம் என சட்ட நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி, குற்றம் நடந்த இடத்தில் தான் விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்படி பார்த்தால், இந்த வழக்கில் குற்றம் நடந்த இடம் கிரீஷ்மா வீடு தான். எனவே தமிழக போலீசார் (பளுகல் போலீசார்) தான் வழக்கின் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று சட்ட நிபுணர்கள் சொல்கின்றனர்.

இல்லாவிட்டால் வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வரும் போது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக வழக்கு அமைந்து விடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இதனால் வழக்கை கேரள போலீசாரே நடத்தலாமா? அல்லது தமிழக போலீசுக்கு மாற்றலாமா? என போலீசார் குழப்பத்தில் உள்ளனர்.

இது தொடர்பாக கேரள மாநில போலீஸ் டி.ஜி.பி., மாநில அட்வகேட் ஜெனரலிடம் கருத்து கேட்டுள்ளதாக தெரிகிறது. எனவே இந்த வழக்கு தமிழக போலீசாருக்கு மாற்றப்படுமா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிய வரும்.

Tags:    

Similar News