காஞ்சிபுரம் அருகே 2880 போலி மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது
- போலி மதுபாட்டில்கள் எங்கு தயாரிக்கப்பட்டன,எங்கிருந்து கடத்தி செல்லப்படுகிறது.
- மாகரல் கிராமத்திலிருந்து சித்தாலப்பாக்கம் செல்லும் சாலை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே ரூ 6லட்சம் மதிப்புள்ள 2880 போலி மதுபாட்டில்களை கடத்தி சென்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுவிலக்கு அமலாக்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளர் பாலச்சந்திரன் தலைமையிலான போலீசார் காஞ்சிபுரம் அருகே மாகரல் கிராமத்திலிருந்து சித்தாலப்பாக்கம் செல்லும் சாலை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மினி சரக்கு லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் தலா 48 பாட்டில்களை உள்ளடக்கிய 60 பெட்டிகள் இருந்தன.மொத்தம் 2880 மதுபாட்டில்களை கடத்தி சென்று கொண்டிருப்பதும் அவையனைத்தும் போலி மதுபாட்டில்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
விசாரணையில் இவற்றை மினிசரக்கு வாகனத்தில் கடத்தி சென்று கொண்டிருப்பது திருவண்ணாமலை மாவட்டம் கூழமந்தல் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன்(44)என்றும் இதன் மதிப்பு ரூ.6லட்சம் இருக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.போலி மதுபாட்டில்கள் எங்கு தயாரிக்கப்பட்டன,எங்கிருந்து கடத்தி செல்லப்படுகிறது,இக்கடத்தலில் தொடர்புடையவர்கள் யாராக இருக்கலாம் எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.